சத்தீஸ்கரில் தொடங்கிய வாக்குப்பதிவு: குண்டு வெடிப்பில் சிஆர்பிஎஃப் வீரர் காயம்!

By Manikanda Prabu  |  First Published Nov 7, 2023, 10:36 AM IST

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது


மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்த 20 தொகுதிகளில் நக்சல் ஆதிக்கம் மிகுந்த 10 தொகுதிகளுக்கு காலை 7 முதல் மாலை 3 மணி வரையும், மீதமுள்ள 10 தொகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், சுக்மா மாவட்டத்தில் தொண்டமார்கா பகுதியில் குண்டு வெடித்ததில் சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்துள்ளார். நக்சலைட்டுகள் வைத்த குண்டு வெடித்ததில் காயமடைந்துள்ள தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். 

முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 20 தொகுதிகளில் 25 பெண்கள் உட்பட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 40,78,681 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 20,84,675 ஆகவும், ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19,93,937 ஆகவும், 69 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர்.

ரயில்வே துறையை கேலிகூத்தாக்கும் மோடி அரசு: சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்!

முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு 5,304 தேர்தல் சாவடிகள் அமைக்கப்பட்டு, 25,249 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 40,000 பேரும், மாநில போலீசார் 20,000 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன.

click me!