போலி விசா மோசடி... வெளிநாட்டு வேலை ஆசை காட்டி ரூ. 70 லட்சம் சுருட்டிய கும்பல்!

Published : Aug 27, 2025, 06:06 PM IST
Visa Fraud

சுருக்கம்

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நேபாள இளைஞர்கள் 19 பேரிடம் ரூ. 70 லட்சம் மோசடி செய்த கும்பலை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நேபாளத்தைச் சேர்ந்த பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த கும்பலை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவரைத் தேடி வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

செர்பியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 19 நேபாள மக்களிடம் சுமார் ரூ. 70 லட்சம் மோசடி செய்த ஜெயகுப் மற்றும் ரூபேஷ் ஆகிய இருவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

போலீசில் புகார்:

டெல்லி காவல்துறை தகவலின்படி, 22 வயதான சுஜன் கட்கா என்ற நேபாள இளைஞர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுஜன் அளித்த புகாரில், கடந்த ஆண்டு ஜெயகுப் தன்னை ஒரு டிராவல் ஏஜென்ட் என்று அறிமுகம் செய்துகொண்டு, தனக்கும் தனது நண்பர்கள் 18 பேருக்கும் செர்பியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

நம்பவைப்பதற்காகப் போலியான விசா மற்றும் வேலைக்கான கடிதங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களையும் ஜெயகுப் காட்டியுள்ளார். இதை நம்பிய பாதிக்கப்பட்டவர்கள், தங்களுடைய பாஸ்போர்ட்களை அவரிடம் கொடுத்து, ரூ. 70 லட்சத்தை ஒரு க்யூஆர் கோடு மூலம் அனுப்பியுள்ளனர்.

ரூ. 70 லட்சம் மோசடி:

பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தலா 3,500 யூரோக்கள் (சுமார் ரூ. 3 முதல் 5 லட்சம் வரை) செலுத்தியுள்ளனர். ஜூலை மாதத்தில் விசா பெறுவதற்காக டெல்லி வந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் பல காரணங்களைச் சொல்லி இழுத்தடித்துள்ளார். அவரை நேருக்கு நேர் கேட்டபோது, மிரட்டி, பணம் மற்றும் பாஸ்போர்ட்டுகளைத் தர மறுத்துள்ளார்.

போலீசார் நடத்திய விசாரணையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் போலியானவை எனத் தெரியவந்துள்ளது.

இருவர் கைது

ஆகஸ்ட் 25 அன்று இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜெயகுப் நொய்டாவில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 13 நேபாள பாஸ்போர்ட்டுகள் மற்றும் மோசடி தொடர்பான சாட்களைக் கொண்ட ஒரு மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், இந்த மோசடியில் ரூபேஷின் பங்கும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, டெல்லியின் சாவ்லா பகுதியில் ரூபேஷ் கைது செய்யப்பட்டார். சச்சின் மற்றும் ஜார்ஜ் என்ற மேலும் இரண்டு குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர்.

மோசடி செய்த பணத்தில் சுமார் ரூ. 60 லட்சம் ஹவாலா மூலம் ஜெயகுப்பின் மனைவி உட்பட நண்பர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த மோசடி கும்பல், போலியான விசா மற்றும் பணி நியமனக் கடிதங்களைக் கொடுத்து, பெரும் பணத்தையும் பாஸ்போர்ட்களையும் பெற்றுக்கொள்கிறார். இந்த முறையில் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பலரையும் ஏமாற்றி வந்ததாகக் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!