
Stalin Supports Rahul Gandhi’s Bihar Voter Rights March! பீகாரில் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், பீகாரில் மொத்தமுள்ள 7.9 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்தும் நாடு முழுவதும் தேர்தலில் தேர்தலில் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும் கூறி பீகாரில் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை யாத்திரை நடத்தி வருகிறார்.
பீகாரில் தமிழில் பேசிய முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில், இன்று பாட்னாவில் நடைபெற்ற வாக்காளர்கள் உரிமை யாத்திரையில் ராகுல் காந்தி, தேவஜஸ்வி யாதவ், பிரியங்கா காந்தி ஆகியோருடன் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்பு வாக்காளர் உரிமை யாத்திரையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ''ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அலைகடலென திரண்டு வருகின்றனர். ஜனநாயகத்தை காக்க மக்கள் நனனுக்காக இருவரும் ஒன்றிணைந்துள்ளீர்கள். அரசியலை கடந்து உடன்பிறப்புகளை போன்று இருக்கும் உங்களின் இந்த நட்பு தான் பீகாரில் தேர்தலில் வெற்றியை தரப்போகிறது'' என்று தெரிவித்தார்.
வாக்காளர்களை நீக்கியது ஜனநாயக படுகொலை
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ''பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது ஜனநாயக படுகொலை ஆகும். சொந்த மண்ணின் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது பயங்கரவாதம் தவிர வேறு ஏதும் இல்லை. பாஜக அரசு தேர்தல் ஆணையத்தை சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை போல் மாற்றி விட்டது. இது குறித்து ராகுல் காந்தி கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் தேர்தல் ஆணையத்தால் சரியான பதிலை சொல்ல முடியவில்லை'' என்றார்.
மைனாரிட்டி பாஜக அரசு
மேலும் மு.க.ஸ்டாலின் தனது பேச்சில், ''மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி எழுச்சி பெற்றதால் பாஜக 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மைனாரிட்டி அரசாக உள்ளது. இதேபோல் பீகாரிலும் ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவ்வும் இணைந்து மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள். பீகாரில் இவர்கள் இருவரும் பெறப்போகும் வெற்றி இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாக அமையப் போகிறது.