
இந்தியரை மணந்து கொள்ள விரும்பிய பாகிஸ்தான் பெண்ணுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு, மணமகன் கவலைப்பட தேவையில்லை என்றும் பாக். பெண்ணுக்கு விசா வழங்க ஏற்பாடு செய்வதாகவும் மத்திய அமைச்ச்ர சுஷ்மா சுவராஜ் உறுதியளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரைச் சேர்ந்த கன்னையாலால் டேவானியின் மகன் நரேஷ். இவருக்கும் பாகிஸ்தானில் உள்ள கராச்சியைச் சேர்ந்த பிரியாவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. அடுத்த மாதம் 7 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் செய்ய இரண்டு வீட்டாரும் முடிவு செய்திருந்தனர்.
மணமகன் நரேஷின் குடும்ப வழக்கப்படி, மணமகள் புகுந்துந்த வீட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே வர வேண்டும். அதன் பின்னரே திருமணம் நடத்தவது வழக்கம்.
இந்த நிலையில், பாக். பெண் பிரியா, இந்தியா வருவதற்கு விசா வழங்க கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால், மணமகள் பிரியா மற்றும் அவரின் குடும்பத்தார் இந்தியா வர பாகிஸ்தான் விசா வழங்கப்படவில்லை. இந்த நிலையில் திருமண பத்திரிக்கை அச்சடித்து, அதற்கான சடங்குகள் துவங்கியும் விட்டன. ஆனாலும், மணமகளுக்கு விசா வழங்கவில்லை.
இதனை அடுத்து, பாகிஸ்தான் பெண் பிரியா, இந்தியா வர உதவும்படி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மூலம் மணமகன் நரேஷ் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நரேஷின் கோரிக்கையை அடுத்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், பாகிஸ்தான் பெண் பிரியாவுக்கு விசா வழங்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். அது மட்டுமல்லாமல், மணமகன் நரேண், இதனை நினைத்து கவலை அடைய வேண்டாம் எனவும் சுஷ்மா சுவராஜ், டுவிட்டரில் ஆறுதல் கூறியுள்ளார்.