
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, தான் காதலித்து வந்த நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி இத்தாலியில் வைத்து திருமணம் முடித்துக் கொண்டார். அதன் பின்னர் தில்லியிலும் மும்பையிலும் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.
இந்நிலையில், விராட் கோலி மனைவி அனுஷ்காவுடன் சேர்ந்து சுற்றுப் பயணத்தை சுகமாய்க் கழித்து வருகிறார். தென்னாப்பிரிக்காவில் பயணம் மேற்கொண்டிருக்கும் விராட் கோலி, தன் காதல் மனைவி அனுஷ்காவுடன் எடுத்துள்ள செல்ஃபிக்களையும் டிவிட்டர் பதிவுகளில் போட்டு வருகிறார்.
ஒரு பதிவில், தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் உள்ள சுற்றுலா தலத்தில் செல்ஃபி எடுத்துப் பதிவிட்டு, அதில், “கேப்டவுன் மிக மிக அழகான இடம். அது என் ஒரே ஒரு எனக்கானவருடன் இருக்கும் போது மேலும் அழகாகத் தெரிகிறது” என்று பதிவிட்டுள்ளார். அழகான புன்னகை பூக்கும் முகத்துடன் விராட் கோலி வெளித்தெரியும் இந்தப் புகைப்படத்துக்கு ஒரு மணி நேரத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் போட்டனர்.
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தில் உள்ளது. இங்கே இந்தியா ஆறு ஒரு நாள் போட்டி, மூன்று டெஸ்ட் போட்டி, மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அனுஷ்கா சர்மா தனது கணவர் கோலியுடன் இரு மாத பயணத்தில் இணைந்துள்ளார்.