அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு... வலுக்கும் போராட்டம்.. மத்திய அரசு திடீர் ஆலோசனை...!

By Kevin KaarkiFirst Published Jun 16, 2022, 11:50 AM IST
Highlights

ஒருகட்டத்தில் போலீசாரும் கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில், துப்பாக்கியை காட்டி போராட்டக்காரர்களை விரட்டி அடிக்க போலீசார் முயற்சி செய்தனர். 

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பீகார் மாநிலத்தில் இந்த திட்டத்திற்கு எதிரான இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். 

ஜெஹானாபாத் பகுதியில் மாணவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது மாணவர்கள் நடத்திய கல்வீச்சில் பொது மக்கள் மற்றும் காவல் துறையினர் தாக்கப்பட்டனர். ஒருகட்டத்தில் போலீசாரும் கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில், துப்பாக்கியை காட்டி போராட்டக்காரர்களை விரட்டி அடிக்க போலீசார் முயற்சி செய்தனர். 

கடும் போராட்டம்:

இதே போன்று நவாடா பகுதியிலும் இளைஞர்கள் ரெயில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது இவர்கள் டையர்களை தீயிட்டு கொளுத்தி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் ரெயில்வே பொருட்களை சேதப்படுத்தியும், பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசும் சம்பவங்களும் அரங்கேறின. 

இது மட்டும் இன்றி சாஹர்சா மற்றும் அரா போன்ற பகுதிகளிலும் மாணவர்கள் ரெயில் நிலையத்தில் போராட்டம் நடத்தியதோடு, கல்வீச்சு தாக்குதலும் நடத்தினர். கல்வீச்சு மற்றும் போராட்டத்தை நிறுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த திட்டத்திற்கு எதிரான தமிழ் நாட்டின் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 

அக்னிபத் திட்டம் எதிர்ப்பு:

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அக்னிபத் திட்டத்தின் கீழ், ராணுவ பணியில் சேரும் வீரர்கள் நான்கு ஆண்டுகள் கழித்து கட்டாயமாக பணி நிறைவு அளிக்கப்படும். இந்த நான்கு ஆண்டுகள் பணி முடிந்த பின் கிடாஜூவிட்டி மற்றும் பென்சன் பலன்கள் எதுவும் வழங்கப்படாது. இதன் காரணமாக ராணுவ வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் என கூறி அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

மறுபரிசீலனை:

மத்திய அரசு அறிமுகம் செய்து இருக்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக முதல் நாளே போராட்டங்கள் கடுமையாக நடைபெற்றது. இதை அடுத்து நான்கு ஆண்டுகள் பணி நிறைவுக்கு பின் ராணுவ வீரர்களுக்கு வேறு பணி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெலிகாம் துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

அதன்படி அக்னிபத் திட்டத்தின் கீழ் பணி செய்ய இருக்கும் வீரர்களின் திறமை, கட்டுப்பாடு, தொழில்திறன் உள்ளிட்டவைகளை தகவல் தொடர்புத் துறையில் பயன்படுத்த முடியுமா என்ற ஆலோசனை நடைபெற்றது. இது மட்டும் இன்றி வேறு வேலைவாய்ப்புகள் வழங்குவது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டாக கூறப்படுகிறது. 

click me!