
நாடு முழுவதும் உள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு, அடுத்த ஆண்டு (2018) இறுதிக்குள் இணைய தள (இன்டர்நெட்) வசதி செய்து கொடுக்கப்பட்டுவிடும், ஒரு மாதத்துக்குள் ஒரு லட்சம் ஊராட்சிகள் இணைக்கப்பட்டுவிடும் என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.
மக்கள் அவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா பதில் அளித்துப் பேசினார். அவர் கூறுகையில், “ நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் 100எம்.பி.பி.எஸ். வேகத்தில் இன்டர்நெட் வசதி கொடுக்க பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
முதல்பகுதித் திட்டத்தின்படி, ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துக்கள, இம்மாத இறுதிக்குள் இணைக்கப்பட்டு விடும். அனைத்து ஊராட்சிகளுக்கும் 2018ம் ஆண்டு இறுதிக்குள் இன்டர்நெட் வசதி வழங்கப்பட்டு விடும்.
ஒவ்வொரு கிராமபஞ்சாயத்துகளிலும் ‘வைபை’ செயல்படும் இடங்கள் உருவாக்கப்படும். இதற்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. இதன்படி ஒவ்வொரு கிராமத்திலும் 2 ‘வை-பை’ செயல்படுத்தும் இடங்கள் உருவாக்கப்பட்டு, கண்ணாடி இழைக் கேபிள் மூலம் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தில் நிலவும் காலதாமதத்தை அரசு அறியும். அதற்கான காரணங்களை தெரிந்து கொண்டு, அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கும். வடகிழக்கு மாநிலங்களில் ஏறக்குறைய 8,621 கிராமங்களுக்கு மொபைல்போன் செயல்படுத்தும் வகையில் டவர் அமைக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.