
ஐதராபாத்தில் உயர்கல்விக்கான ஐசிஎப்ஏஐ அறக்கட்டளை நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு சட்டக் கல்வி படித்து வரும் மாணவன் ஹிமாங் பன்சால். இவரை அறைந்து, உதைத்து, கைகளை முறுக்கி கடுமையாக தாக்கி இருக்கும் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த வீடியோ பதிவில், "ஜெய் மாதா தி" "அல்லாஹு அக்பர்" போன்ற கோஷங்களை எழுப்புமாறு அந்த மாணவனை வலியுறுத்துவதும் பதிவாகியுள்ளது.
அவரை தாக்கியவர்களில் ஒருவர், ''அவருடைய சித்தாந்தத்தை சரி செய்ய விரும்பினோம். கோமா நிலைக்கு செல்லும் வரை தாக்குவோம், அப்போது, அவர் ஒரு புதிய உலகத்தை நினைவில் கொள்வார்" என்று குறிப்பிட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் மற்றொருவர் பாதிக்கப்பட்ட ஹிமாங்கின் பர்சை எடுத்து மற்றொருவரிடம் கொடுத்து உனக்கு வேண்டிய பணத்தை எடுத்துக் கொள் என்று கூறுவது அனைத்தும் வீடியோவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவரை தாக்கிய 12 பேரில் 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ஏழு பேரும் தப்பிச் சென்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரையும் கல்லூரியில் இருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
சமூக ஊடகங்களில் நபிகள் நாயகத்திற்கு எதிராக ஹிமாங் தனது கருத்துக்களை தெரிவித்து இருந்த நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி மாணவர் ஹிமாங் மீது தாக்குதல் நடந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து காவல்துறையில் ஹிமாங் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தன்னை உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், டிரவுசரை நீக்காவிட்டால், சாகும் வரை தாக்குவோம் என்று மாணவர்கள் கூறியதாக காவல்துறையிடம் மாணவன் ஹிமாங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளம் பக்கத்தில் பதிவு செய்து, தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ், சைபர் போலீஸ் கமிஷனர் ஆகியோரை ஹிமாங் டேக் செய்துள்ளார்.
கல்லூரி நிர்வாகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களை கல்லூரி நிர்வாகம் சகித்துக் கொள்ளாது. உடனடியாக செயல்பட்டு இதுபோன்ற விரும்பத்தாகத செயல்களில் ஈடுபட்ட 12 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்'' ' என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. "இங்கு மதத்தைப் பற்றியது அல்ல இந்தப் பிரச்சனை. இது போன்ற ஆத்திரமூட்டும் சம்பவங்கள் கவனிக்கப்படாமல் போவது போலி மதச்சார்பின்மையை காட்டுகிறது" என்று பாஜக தலைவர் ரச்சனா ரெட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருக்கும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.