புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கஜ துவாரத்தில் குடியரசு துணைத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்
குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு ஜக்தீப் தன்கர் இன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கஜ துவாரத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். இது ஒரு “வரலாற்றுத் தருணம் மற்றும் ஒரு மைல்கல் வளர்ச்சி” என்று விவரித்த குடியரசு துணைத் தலைவர், இந்தியா சகாப்த மாற்றத்தைக் காண்கிறது என்றும், பாரதத்தின் வலிமை, சக்தி மற்றும் பங்களிப்பை உலகம் முழுமையாக அங்கீகரித்துள்ளது என்றும் கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாம் கனவிலும் நினைத்துப் பார்க்காத வளர்ச்சியையும் சாதனைகளையும் காணும் காலங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று நமது கள யதார்த்தம் உலகளவில் மிகவும் சாதகமான முறையில் பிரதிபலிக்கிறது.” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை மற்றும் மக்களவை செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை தொடங்கும் ஐந்து நாள் சிறப்பு அமர்வு தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் எனவும், செப்டம்பர் 19 அன்று விநாயக சதுர்த்தியன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிகிறது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை: நாளை தொடங்கும் மேல்முறையீடு!
சிறப்பு அமர்வின் முதல் நாளில், இரு அவைகளும் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாகவும், அடுத்த நாள், புதிய கட்டிடத்திற்கு அவை நடவடிக்கைகளை மாற்றுவதற்கு முன், மத்திய மண்டபத்தில் கூட்டுக் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்த விவரம் அறிந்த தகவல்கள் கூறுகின்றன.
டெல்லியில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடம் அமைந்துள்ளது. இந்த சூழலில் பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் டெல்லியில் 4 மாடிகளைக் கொண்ட ரூ.970 கோடி மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.