
முஸ்லிம் சமூகம் தாங்கள் பின்பற்றும் முத்தலாக் முறையில் மாற்றம் கொண்டுவராவிட்டால், அரசு நடவடிக்கை எடுத்து அந்த முறையையே தடை செய்ய சட்டம் கொண்டுவரும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதியில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ேநற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
சட்டம் இயற்றுவோம்
முஸ்லிம் சமூகத்தினர் தாங்கள் பின்பற்றும் முத்தலாக் முறையில் மாற்றம் கொண்டு வந்து, தங்களையும் மாற்றிக்கொண்டால் அது நல்லது. வரவேற்புக்குரியதாகும். இல்லாவிட்டால், பிரச்சனைகள் தீவிரமானால்,மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து முத்தாலாக் முறையை தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டியது வரும்.
சமஉரிமை
மத்தியஅரசின் நடவடிக்கை என்பது, எந்த தனிநபரின் விஷயத்திலும் தலையிடுவது ஆகாது. அதேநேரம், பெண்களுக்கு நீதி கிடைக்கிறதா என்பது கேள்விக் குறியதாகும்? அனைத்து பெண்களுக்கும் சம அளவில் உரிமை கிடைக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுதான் பிரச்சினை.
இந்துக்கள் வழக்கம்
இந்துக்கள் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வந்த மோசமான முறைகளான குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல், வரதட்சணை போன்றவற்றை ஒழிக்க சட்டம் இயற்றினோம் என்பதை முஸ்லிம் சமூகத்தினர் நினைவில் கொள்ள வேண்டும்.
ஏற்றனர்
குழந்தை திருமணம் குறித்து இந்து சமூகம் விவாதித்து, அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி தடை செய்தது. இரண்டாவது, உடன் கட்டை ஏறும் வழக்கமான கணவன் இறந்தவுடன், மனைவியும் இறக்கும் முறையையும் சட்டத்தால் தடை செய்து இருக்கிறோம். வரதட்சணை முறையையும் ஒழிக்க சட்டம் கொண்டு வந்து தடை செய்தோம். இதை இந்துக்கள் ஏற்றுக்கொண்டனர்.
சீர்திருத்தம்
ஒரு வழக்கம் சமூகத்தின் நன்மைக்கு கேடானது என்று எண்ணும்போது, இந்துக்கள் அது குறித்து விவாதித்து, அதில் சீர்திருத்தங்கள் கொண்டுவந்தனர். இன்னும் சில சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன, அதற்கான முயற்சிகளையும் சரியான திசையில் எடுக்க வேண்டும்.
மனிதர்கள் என்றால் மனிதர்கள்தான். அவர்களை இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பிரிக்கக் கூடாது. எந்த பாகுபாட்டின் அடிப்படையிலும் பெண்களுக்கு நீதி வழங்கக்கூடாது.
மகிழ்ச்சி
உலகம் இந்தியாவை அங்கீகரிக்கும்போது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.குல்புஷன் ஜாதவ் வழக்கில், வரலாற்றில் முதல்முறையாக, சர்வதேச நீதிமன்றத்தை அணுகி, பாகிஸ்தானின் முட்டாள்தனமான செயலான ஜாதவைதூக்கிலிடும் செயலுக்கு தடை பெற்று இருக்கிறோம். இந்த விஷயம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
10 ஆண்டுகள்
என்னுடைய மகிழ்ச்சி என்பது நரேந்திர மோடி தொடர்ந்து 10 ஆண்டுகள் பிரதமராக இருக்க வேண்டும் என்பது தான். இந்த தேசத்தின் எண்ணமே மோடியுடன் பயணிக்க வேண்டும் என்பதுதான். பிரதமராக மோடி 10 ஆண்டுகள் இருந்தால், உலகில் இந்தியா மிகுந்த வல்லமையான நாடாக, வலிமையான நாடாக மாறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.