
ஜூலை மாதம் முதல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வர உள்ள ஜி.எஸ்.டி. வரியில் இறைச்சி வெட்டும் கூடங்கள், கால்நடை மருத்துவமனைகளுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுற்றுலா செல்லும் பொழுதுபோக்கு பூங்காவான ‘தீம் பார்க்’, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வௌி இடங்களில் உணவு, குளிர்பானங்கள் கேட்ரிங் சேவை, சர்க்கஸ் காட்சிகள், நடன நிகழ்ச்சிகள், கிராமியக் கலைகள், அரங்குகளில் நடக்கும் இசைக்கச்சேரிகள் ஆகியவற்றுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி.
நாடுமுழுவதும் ஜூலை 1-ந் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வர உள்ளது. இதில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி குறித்து முடிவு செய்ய கடந்த 18, 19-ந்தேதிகளில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிதலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் ஏறக்குறைய 1,211 பொருட்களுக்கான வரிவிகிதங்கள் முடிவு செய்யப்பட்டன.
விமானசேவை
இதில் விமான சேவைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதாவது விமானங்களை வாடக்கை விடுதல், சுற்றுலா அழைத்துச்செல்பவர்களுக்கு 5 சதவீதம் வரி, விமானத்தில் ‘எக்னாமிக் கிளாஸ்’ பயணம் செய்பவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
12 சதவீதம்
அறிவுசார் சொத்துரிமையை தற்காலிகமாக மற்றொருவருக்கு மாற்றுதல், அல்லது மற்றவர் பயன்படுத்த அனுமதி அளித்தல் ஆகியவற்றுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.
வரிவிலக்குகள்
மேலும் கல்வி, மருத்துவசிகிச்சை, இறைச்சி வெட்டும் கூடங்கள், கால்நடை மருத்துவம், அதற்கு அளிக்கும் கடன், டெபாசிட் , புனித பயணங்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், வீடு வாடகைக்கு விடுதல், சுங்கச்சாவடிகள், மின்பகிர்மானம் ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு நிறுவனம், அல்லது தனிநபருக்கு மூத்த வழக்கறிஞர் ஒருவர் சட்ட உதவிகள் அளித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாய், ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை இருந்தால் அதற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அரசு நூலகம் புத்தகங்களை வாடக்கைக்கு விடுதல், புத்தக பதிப்பகம், சில்லரை விற்பனைக்கு பேக்கிங் செய்தல், காய்கறி, பழங்களை பேக்கிங் செய்தல் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.