
அனுமதியின்றி தனது பாடல்களை பாடக்கூடாது என எஸ்பிபிக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் சுமூகமான முறையில் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – 50 என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இசைக் குழு பயணித்து வருகிறது.
இந்த நிலையில் இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பாடகர் எஸ்.பி.பி. சரண், பாடகி சித்ரா மற்றும் உலகளவில் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது என்றும் அதையும் மீறிச் செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி பாடினால் மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இளையராஜாவின் இந்த அதிரடி நடவடிக்கை சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது.
இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் லட்சக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் தங்களது எண்ணங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தனது ட்விட்டர் பக்கத்தில் இப்பிரச்சனை குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் இளையராஜாவின் பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடுவதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது தனக்கு மிகுந்த ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இப் பிரச்சனை நல்லபடியாக பேசி சரி செய்யப்பட வேண்டும் என யோசனை தெரிவித்துள்ள வெங்கய்ய நாயுடு, இந்த விவகாரம் சுமூகமான முறையில் தீர்க்கப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.