
இங்கிலாந்தைச் சேர்ந்த வோடபோன் நிறுவனமும், ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஐடியா செல் நிறுவனமும் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் நாட்டில் மிகப்பெரிய வர்த்தகப்பிரிவையும், அதிகமான வாடிக்கையாளர்களையும் கொண்டதாக மாறும்.
இந்த இணைப்பு அடுத்த 2 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என பிர்லா நிறுவனத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா தெரிவித்தார்.
4.9 சதவீத பங்குகள்
இணைப்புக்குப் பிறகான புதிய நிறுவனத்தின் 45.1சதவீத பங்குகள் வோடபோன் வசம் இருக்கும்.ஏற்கனவே 4.9 சதவீத பங்குகளை, வோடபோன் நிறுவனம் ரூ.3,874 கோடிக்கு ஐடியா நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளது. ஐடியா நிறுவனம் தனக்கு சொந்தமாக 26 சதவீதம் பங்குகளையும் மற்றவற்றை பொதுப் பங்குதாரர்களையும் கொண்டு இருக்கும்.
வாடிக்கையாளர்கள்
ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களில் வோடபோன் நிறுவனம் 20.45 கோடி வாடிக்கையாளர்களையும் 18 சதவீதத்தையும் கொண்டுள்ளது. ஐடியா நிறுவனம் 19 கோடி வாடிக்கையாளர்களையும் 17 சதவீதத்தையும் கொண்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் 26.58 கோடி வாடிக்கையாளர்களையும், 24 சதவீதத்தையும் கொண்டுள்ளது.
ஐடியா நிறுவனத்துக்கு, புதிய நிறுவனத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. குமாரமங்கலம் பிர்லா, புதிய நிறுவனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வோடபோன், ஐடியா இரண்டு நிறுவனங்களின் பங்குகளும் குறிப்பிட்ட காலத்துக்கு சம அளவிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பு
இந்த இணைப்புக்கு பின் வோடபோன் இந்தியா நிறுவனத்தின் மதிப்பு ரூ.82 ஆயிரத்து 800 கோடியாகவும், ஐடியா நிறுவனத்தின் மதிப்பு ரூ.72 ஆயிரத்து 200 கோடியாகவும் உயர்ந்தது. இணைப்பு அறிவிப்பு வெளியானதற்குப் பிறகு ஐடியா நிறுவனத்தின் பங்குகள் 14.25% அதிகரித்துள்ளன. இதன்மூலம் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்த ஏர்டெல்நிறுவனம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.