ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்பிழைத்த ஒரே நபர் வருண் சிங்… யார் இவர்?

By Narendran SFirst Published Dec 8, 2021, 7:53 PM IST
Highlights

14 பேர் பயணித்த ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 13 பேர் உயிரிழந்த கோர விபத்தில் உயிர் தப்பிய வருண் சிங், கடந்த 2020 ஆம் ஆண்டு LCA தேஜாஸ் போர் விமானத்தை காப்பாற்றியதற்காக சௌர்யா சக்ரா விருது வாங்கியவர்.

14 பேர் பயணித்த ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வருணை மீட்புப் படையினர் மீட்கும் போது 80 சதவிகித தீக்காயங்கள் உடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. 13 பேர் உயிரிழந்த கோர விபத்தில் உயிர் தப்பிய வருண் சிங் , கடந்த 2020 ஆம் ஆண்டு LCA தேஜாஸ் போர் விமானத்தை காப்பாற்றியதற்காக சௌர்யா சக்ரா விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர். ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஒன்றரை மணிநேரமாக ஹெலிகாப்டர் தீ பிடித்து எரிந்தது. விபத்து நடந்த இடத்தில் 4 பேரின் உடல்கள் முற்றிலும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவ மதுலிக்கா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டெர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், குருசேவக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய் தேஜா, ஹாவ் சத்பால் உட்படப் 13 பேர் உயிரிழந்துள்ளனர். குரூப் கேப்டன் வருன் சிங் படுகாயங்களுடன் வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்த நிலையில் உயிர்பிழைத்த ஒரே நபர் வருண் சிங் . இவர் DSSC பணிபுரிகிறார். இவருக்கு 2020 ஆம் ஆண்டு வான்வழி அவசர நிலையின் போது தனது LCA தேஜாஸ் போர் விமானத்தை காப்பாற்றியதற்காக சௌர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது. வருணை மீட்புப் படையினர் மீட்கும் போது 80 சதவிகித தீக்காயங்கள் உடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

click me!