#BipinRawat தரையிறங்கும் 5 நிமிடங்கள் முன்பே... அனைத்தும் முடிந்த சோகம்... பகீர் தகவல்கள்

By manimegalai aFirst Published Dec 8, 2021, 7:39 PM IST
Highlights

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் தரையிறங்க 5 நிமிடங்கள் முன்பு விபத்தில் சிக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

குன்னூர்:  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் தரையிறங்க 5 நிமிடங்கள் முன்பு விபத்தில் சிக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இன்று ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டம் நடக்க இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேர் சூலூர் ராணுவப்படை விமான தளத்தில் இருந்து இன்று காலை 11.17 மணிக்கு  ஹெலிகாப்டரில் வெலிங்டனுக்கு கிளம்பினர்.

சரியாக நண்பகல் மணி 12.20 மணிக்கு குன்னூர் மலைப்பாதையில் உள்ள காட்டேரி பள்ளத்தாக்கு பகுதிக்கு மேலே ராணுவ ஹெலிகாப்டர் பறந்தது. அப்போது நிலவிய மோசமான வானிலை மாறுபாட்டால் ஏற்பட்ட குழப்பத்தின் எதிரொலியாக, கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து பள்ளத்தாக்கில் விபத்துக்குள்ளானது.

தொடக்கத்தில் 4 ராணுவ வீரர்கள் தான் பலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நேரம், செல்ல செல்ல விபத்தை நேரில் பார்த்தவர்கள் சொன்ன தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

அவர்கள் கூறியதாவது: ஹெலிகாப்டர் விழுந்த போது, அங்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்துள்ளது. பதறியடித்த வந்த போது ஒருவர் கையசைத்து கூப்பிட்டு உள்ளார். ராணுவ அதிகாரி போல் இருந்த அவர் உதவி கேட்டது தெரிந்தது.

அவர் மீது போர்வையை சுற்றி மீட்டோம். வழக்கமாக இங்கு ஹெலிகாப்டர் பறக்கும். அது போல தான் இப்போதும் பறந்ததாக நினைத்தோம். ஆனால் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வந்து மரத்தில் மோதி குடியிருப்பு பகுதியில் விழாமல் பின்னோக்கி இழுத்து கொண்டே சென்று விழுந்தது என்று கூறி இருக்கின்றனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்தில் நாட்டின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த விவரத்தை இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

இன்று காலை சூலூரில் 11. 17 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த குன்னூர் காட்டேரி பகுதிக்கு 12.20 மணிக்கு வந்துள்ளது. விபத்தில் சிக்கிய பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஹெலிகாப்டர் முழுவதுமாக எரிந்ததாக கூறப்பட்டுள்ளது.

விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து வெலிங்டன் வெறும் 10 கிலோ மீட்டர் தொலைவு தான். அதாவது 5 நிமிட தொலைவில் இருந்திருக்கிறது. இன்னும் சொல்ல போனால் ஹெலிகாப்டர் தரையிறங்க 5 நிமிடங்கள் இருந்த தருணத்தில் தான் இந்த கோர விபத்து அரங்கேறி இருக்கிறது.

நாடு முழுவதும் பெரும் சோகத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தி உள்ள நிலையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. பிபின் ராவத்தின் பதவிக்காலம் நிறைவு பெற ஓராண்டு காலம் இருந்த தருணத்தில் துரதிருஷ்டவசமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!