பாஜகவில் சீட் மறுப்பு: வருண் காந்தி உருக்கமான கடிதம்!

By Manikanda PrabuFirst Published Mar 28, 2024, 4:08 PM IST
Highlights

பாஜகவில் சீட் மறுக்கப்பட்ட வருண் காந்தி பிலிபித் தொகுதி மக்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதி பாஜக எம்.பி.யாக இருப்பவர் வருண்  காந்தி. வருண் காந்தியின் பிலிபித் மக்களவைத் தொகுதி ஒருகாலத்தில் அவரது தாயாரான மேனகா காந்தி வசம் இருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலில் பிலிபிட் மக்களவைத் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தேர்தல் அரசியலில் வருண் காந்தி இறங்கினார். அவரது தாயார் மேனகா காந்தி தற்போது சுல்தான்பூர் எம்.பி.யாக உள்ளார். 1996ஆம் ஆண்டு முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த தொகுதியின் எம்பியாக மேனகா காந்தியும், வருண் காந்தியும் இருந்துள்ளனர்.

ஆனால், அண்மைக்காலமாகவே விவசாயிகள் துயரம், வேளான் மசோதா, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உள்ளிட்ட பல பிரச்சினைகளில் சொந்தக் கட்சியான பாஜகவை கடுமையான விமர்சித்திருவர்களில் வருண் காந்தியும் ஒருவர். ஆனால், வருண் காந்திக்கு எதிராக கட்சி எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாலும், அவரது செயல்பாடுகளை பாஜக உன்னிப்பாக கவனித்து வந்தது.

இந்த நிலையில், எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் எம்.பியாக இருக்கும் மேனகா காந்திக்கு அந்த தொகுதியை பாஜக மீண்டும் வழங்கி உள்ளது. ஆனால், பில்பித் தொகுதி வருண் காந்திக்கு மறுக்கப்பட்டுள்ளது. ருணின் பெயர் பாஜகவின் ஐந்தாவது வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. பிலிபித் தொகுதியில் அவருக்குப் பதிலாக உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் ஜிதின் பிரசாத் பெயரை பாஜக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பாஜகவில் சீட் மறுக்கப்பட்ட வருண் காந்தி பிலிபித் தொகுதி மக்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கணக்கில் அடங்காத உணர்வுபூர்வமான நினைவுகளோடு இந்தக் கடிதத்தை எழுதுவதாக குறிப்பிட்டுள்ள வருண் காந்தி, மூன்று வயது சிறுவனாக இருந்தபோது தனது தாயின் விரல்களைப் பிடித்துக்கொண்டு முதல் முறையாக பில்பித் வந்ததை நினைவு கூர்ந்துள்ளார்.

அப்போது, இந்த தொகுதிக்காக நான் பணியாற்றுவேன் என்றோ, இந்த தொகுதி மக்கள் எனது குடும்பமாக மாறுவார்கள் என்றோ நான் நினைக்கவில்லை எனவும், பில்பித் தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்காக கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாகவே எம்.பி. பதவியை கருதியதாகவும் வருண் காந்தி தெரிவித்துள்ளார்.

“பில்பித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி முடிவுக்கு வரலாம். ஆனால், தொகுதி மக்களுடனான எனது உறவு இறுதி மூச்சு இருக்கும் வரை முடிவுக்கு வராது. எம்.பி.யாக இல்லாவிட்டாலும், உங்கள் மகனாக வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக சேவை செய்வேன். உங்களுக்காக எனது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.” என அந்த கடிதத்தில் வருண் காந்தி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

வருண் காந்தி பாஜக வேட்பாளராக இல்லாவிட்டாலும் சுயேச்சையாக களமிறங்குவார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால், பில்பித் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அந்த யூகத்துக்கு வருண் காந்தி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதனிடையே, “காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் வருண் என்பதால் பாஜக போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. அவர் காங்கிரஸில் சேர விரும்பினால் வருணை வரவேற்கத் தயாராக உள்ளோம்.” என மக்களவையின் எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ஆதிர்ரஞ்சன் சவுத்ரி அழைப்பு விடுத்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!

முன்னதாக, வருணின் கொள்கைகள் வேறு எனக் கூறி தம்முடன் சேர விரும்பிய வருண் காந்தியை ராகுல் காந்தி விலக்கி வைத்திருந்ததாக கூறப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலில் வருண், ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடினர். அதன்பிறகு, “காங்கிரசுக்கு யார் வந்தாலும் வரவேற்போம்; காங்கிரஸ் எதிர்த்து போராடும் பாஜக/ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர் வருன்” என ராகுல் காந்தி கூறிய நிலையில், தற்போது அதிர் ரஞ்சன் சவுத்ரி வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.

அண்மைக்காலமாகவே தேசிய பிரச்சினைகளுக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவதில் வருண் காந்தி பெரிதாக ஈடுபாடு காட்டுவதில்லை என்றாலும், அவர் ஓரங்கட்டப்பட்டு வந்தார். கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து வருண் காந்தியும், அவரது தாயார் மேனகா காந்தியும் ஏற்கனவே நீக்கப்பட்ட நிலையில், வருண் காந்திக்கு பாஜக சீட் மறுத்துள்ளது. ஆனால், அவரது தாய் மேனகாவுக்கு சீட் வழங்கி, பாஜகவை விட்டு வருண் செல்ல முடியாத நிலைக்கு பாஜக தள்ளியுள்ளது. பாஜகவை விட்டு வருண் வெளியேறினாலும் அதன் தாக்கம் அவரது தாய் மேனகா மீது ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதால், வரும் நாட்களில் அவர் என்ன முடிவெடுப்பார் என்பது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

click me!