டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அவருக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பியது. இதுவரை 9 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. அந்த சம்மன்கள் முறைகேடானது என கூறிய அவர், சம்மன்களை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இப்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை கைது செய்துள்ளனர். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு: ஜோதிமணிக்கு ஆதரவான பிரசாரத்தில் கனிமொழி காட்டம்!
அவரது காவல் இன்று முடிவடையும் நிலையில், இன்று அவரை அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளது. இதனிடையே, டெல்லி முதல்வர் பதவிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீதிமன்றம் இதில் தலையிட முடியாது, துணைநிலை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு தான் இதில் அதிகாரம் உள்ளது என கூறி அந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.