எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டத்தில் பேசி வரும் வைகோ, அந்த கூட்டணிக்கான பெயரை முன்மொழிந்துள்ளார்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 15 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.
கூட்டத்தின் முடிவில், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து ஒன்றாக போராட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் நேற்றும், இன்றும் இரு அமர்வுகளாக எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியின் கூட்டம் நடைபெற்று வருகிறது.
பீகாரில் மூன்றாவது முன்னணி: அசாதுதீன் ஓவைசி திட்டம் - பாஜகவுக்கு ஆதரவா?
இந்த கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டுள்ளார். கடந்த முறை போன்று அல்லாமல் இந்த முறை மேலும் சில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு தேச மக்கள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் பெங்களூரு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. மொத்தம் 24 கட்சிகள் பெங்களூரு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெறாத, அதேசமயம் பாஜகவுக்கு எதிரான ஒத்த சிந்தனையில் உள்ள கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்த மெகா கூட்டணிக்கு இதுவரை பெயர் எதுவும் வைக்கப்படவில்லை.
இந்த நிலையில், பெங்களூரு எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அந்த கூட்டணிக்கான பெயரை முன்மொழிந்துள்ளார். அதன்படி, அக்கூட்டணிக்கு “இந்திய மக்கள் முன்னணி” என்ற பெயரை வைகோ முன்மொழிந்துள்ளார்.