பீகாரில் மூன்றாவது முன்னணி: அசாதுதீன் ஓவைசி திட்டம் - பாஜகவுக்கு ஆதரவா?

By Manikanda Prabu  |  First Published Jul 18, 2023, 1:14 PM IST

பீகாரில் மூன்றாவது முன்னணி அமைக்க அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி திட்டமிட்டுள்ளது


நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் துவங்கியுள்ளன. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இதற்கு போட்டியாக தங்களது பலத்தை காட்ட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் டெல்லியில் இன்று கூட்டத்தை கூட்டியுள்ளது.

இந்த நிலையில், 2024 மக்களவை தேர்தலையொட்டி பீகார் மாநிலத்தில் மூன்றாவது முன்னணி அமைக்க அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சியின் பீகார் மாநில தலைவர் அக்தருல் இமான், ஆளும் கட்சிகள் முஸ்லிம்களை வாக்கு வங்கியாகப் பயன்படுத்துகின்றன, ஆனால் அவர்களின் கல்வி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

Tap to resize

Latest Videos

மக்களவை தேர்தலுக்கு முன் மூன்றாவது அணியை உருவாக்குவது குறித்து ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இந்த பேச்சுவார்த்தையின் முடிவு விரைவில் தெரியவரும் என்றார்.

“எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி முஸ்லிம்களின் வாக்குகளை மட்டுமே விரும்புகிறது, ஆனால் அவர்களுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்படுவதில்லை. எனவே, பீகாரில் மூன்றாவது அணியை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். முஸ்லிம்கள் இதுவரை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது மக்களுக்கு அவை புரிந்து விட்டது.” என்றும் அக்தருல் இமான் தெரிவித்துள்ளார்.

2024 தேர்தல்: பாஜக எப்படி தயாராகிறது? வியூகம் என்ன?

பாஜகவுக்கு எதிராக எஐஎம்ஐஎம் கட்சி குரல் கொடுத்து வந்தாலும், பாஜக எதிர்ப்பு முன்னணியில் நாங்கள் சேர்க்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், முஸ்லிம்களின் வாக்குகளை மட்டுமே மெகா கூட்டணி விரும்புகிறது. ஆனால் அவர்களின் போராட்டத்தில் கலந்து கொள்ள அவர்கள் விரும்பவில்லை என்றும் குற்றம் சாட்டினார். எங்களது பலம் என்னவென்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாகயக் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கும் காட்டுவோம் எனவும் அவர் சூளுரைத்தார்.

பீகாரில் மூன்றாவது முன்னணியை அமைக்கும் எஐஎம்ஐஎம் கட்சியை விமர்சித்த ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார், முதலில் அவர்கள் தங்களது அடிப்படையில் நிற்க வேண்டும் என்றார். “மக்கள் அவர்களின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அவர்களை பாஜகவின் ‘பி’ அணியாக அவர்களை கருதுகிறார்கள். முஸ்லிம்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளது என அவர்கள் குழம்பிக் கொள்ளக் கூடாது.” என்றும் நீரஜ் குமார் சாடினார்.

2020 சட்டமன்றத் தேர்தலில் பீகாரின் சீமாஞ்சல் பகுதியில் எஐஎம்ஐஎம் கட்சி ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், அவர்களில் 4 பேர் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியில் இணைந்து விட்டனர். கணிசமான முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட கிஷன்கஞ்ச், அராரியா, கதிஹார் மற்றும் பூர்னியா ஆகிய மாவட்டங்கள் சீமாஞ்சல் பகுதியில் உள்ளன.

பீகார் மாநிலத்தை பொறுத்தவரை, பாஜகவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதாதளம் முறித்துக் கொண்டதுடன், ராஷ்டிரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணியில் அக்கட்சி இணைந்துள்ளது. நிதிஷ்குமார் முதல்வராக தொடரும் நிலையில், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருக்கிறார். மேலும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முக்கிய பணியிலும் நிதிஷ்குமார் முன்னின்று ஈடுபட்டு வருகிறார். எனவே, அம்மாநிலத்தில் கூட்டணியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. இந்த பின்னணியில் மூன்றாவது அணியை உருவாக்கும் எஐஎம்ஐஎம் கட்சி பாஜகவுக்கு சாதகமாக அமையும் என அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

click me!