
உத்தரப்பிரதேச மாநிலத்தின் 21-வது முதல் அமைச்சராக மடாதிபதி யோகி ஆதித்ய நாத் பதவி ஏற்றுக்கொண்டார். துணை முதல்வர்களாக கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா பொறுப்பு ஏற்றனர். 49 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றது.
15 ஆண்டுகளுக்குபின்
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி 325 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு பின் அங்கு பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.
முதல்வர் அறிவிப்பு
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வார காலம் ஆகியும், உ.பி.யில் பா.ஜனதா முதல்வர் யார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படாமல் இருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோரக்பூர் தொகுதியின் லோக்சபா பாஜக எம்.பியான மடாதிபதி யோகி ஆதித்ய நாத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன், ஆதித்ய நாத் ஆளுநர்ராம் நாயக்கை சந்தித்து ஆட்சி அமைக்க நேற்று உரிமை கோரினார்.
திறந்தவெளி மைதானம்
இதையடுத்து லக்னோவில் உள்ள ஸ்மிருதி உப்கான் பார்க்கில் திறந்த வெளி மைதானத்தில் மிகச்சிறப்பான முறையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
உத்தரப்பிரதேசத்தின் 21-வது முதல்வராக மடாதிபதி யோகி ஆதித்ய நாத்துக்கு ஆளுநர் ராம் நாயக் பதவிப் பிரமானம் செய்து வைத்தார். உடன் துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ்சர்மா பொறுப்பு ஏற்றனர். 49 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட அமைச்சரவை பொறுப்பு ஏற்றது.
ஒரே ஒரு முஸ்லிம்
மாநில பா.ஜ.,தலைவர் கேசவ பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா, தரம்பால் சிங், ஸ்ரீகாந்த் சர்மா. சித்தார் நாத் சிங், பிரிஜேஸ்பதக், பூபிந்தர்சிங் சவுத்திரி, சேட்டன் சவுகான், சுரேஷ் கண்ணா, எஸ்.பி.,சிங் பாகல், சந்தீப்சிங், ரீட்டா பகுகுணா, பூபிந்தர்சிங், சுவந்திரா சிங் , முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த மொக்சின் ராஜா சோலே , சுவாமி பிரசாத் மவுரியா, உள்ளிட்டவர்கள் அமைச்சரவையில்இடம் பெற்ற முக்கியஸ்தர்கள் ஆவர்.
இந்த அமைச்சரவையில் 6 பேர் பெண்கள் ஆவர். மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான மோசின் ராஜா என்ற ஒரே ஒரு முஸ்லிம் மட்டுமே அமைச்சரானார்.
மோடி, அமித்ஷா
விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு, மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பா.ஜனதா முன்னணி தலைவர்கள், முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங்யாதவ் ஆகியோரும் வந்து இருந்தனர்.
டபுள் டெக்கர் விமானம்
லக்னோ விமானநிலையத்துக்கு வந்த போயிங் 747 டபுள் டெக்கர் விமானத்தில் ஏராளமான சாதுக்கள், சாமியார்கள், சந்நியாசிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு வந்து இருந்தனர்.