
டெல்லியில் ஜாட் இனத்தவர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பதற்றமான இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த ஜாட் இனத்தவர்கள் கல்வி வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வருடத்தில் இவர்கள் நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
அரசு பொதுச் சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்த்த இப்போராட்டத்தின் நீட்சி தற்போது டெல்லியிலும் பரவியுள்ளது.
முக்கிய பகுதிகளில் போராட்டக்காரர்கள் முகாமிட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. மெட்ரோ ரயில்சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் முக்கியப் பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.