உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி வன்முறை வகுப்புவாதமாக்க வேண்டாம் என நைனிட்டால் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
உத்தரகாண்ட் மாநிலம் நைனிட்டால் மாவட்டம் ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த மதரஸாவை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன்போது, போலீஸாருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மீது கற்களை வீசியும், காவல் நிலையத்தை முற்றுகையிட்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால், அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தால் அம்மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
வன்முறை சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி வன்முறை வகுப்புவாதமாக்க வேண்டாம் என நைனிட்டால் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹல்த்வானி வன்முறை குறித்து நைனிட்டால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங், செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர், “ஹல்த்வானியில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நேரம் வழங்கப்பட்டது. சிலர் உயர் நீதிமன்றத்தை அணுகினர். சிலருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது, சிலருக்கு அவகாசம் வழங்கப்படவில்லை. கால அவகாசம் வழங்கப்படாத இடத்தில், பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சியால் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒரு குறிப்பிட்ட சொத்தை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.” என்றார்.
ஆக்கிரமிப்பு பணிகள் அமைதியாக தொடங்கியதாக தெரிவித்த நைனிட்டால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங், “தீடீரென மாநகராட்சி அதிகாரிகள் மீது கற்கள் வீசப்பட்டன. ஆக்கிரமிப்பு பணிகள் நடைபெறும் போது தாக்குதல் நடத்த வேண்டும் என ஏற்கனவே திட்டமிட்டப்பட்டது போன்று உள்ளது. கற்களை வீசிய முதல் கும்பலின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இரண்டாவது கும்பல் பெட்ரோல் குண்டுகளை வைத்திருந்தது.” என்றார்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவை, இரண்டு கட்டமைப்புகளைக் கொண்ட ஒரு வெற்றுச் சொத்து, இது மதக் கட்டமைப்பாகப் பதிவு செய்யப்படவில்லை. அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. சிலர் இந்த அமைப்பை மதரஸா என்று அழைக்கின்றனர் எனவும் அவர் கூறீனார்.
உத்தராகண்ட் வகுப்புவாத வன்முறை: 4 பேர் பலி, பலர் காயம்.. பள்ளிகள் மூடல்.. இணைய சேவை முடக்கம்..
தொடர்ந்து பேசிய நைனிட்டால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங், “ஆக்கிரமிப்புகளை இடிக்க எந்த தடையும் இல்லை என்பதால், அதனை தொடர முடிவு செய்துள்ளோம். பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த பகுதியிலும் செய்யப்பட்டது. எங்களது குழுக்கள்தான் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. காவல்துறை மற்றும் நிர்வாகத்தால் உயிர் மற்றும் உடமைகளுக்கு தீங்கு விளைவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முழு செயல்முறையும் சரியாக மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஒரு பெரிய கும்பல், அரை மணி நேரத்திற்குள் எங்கள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது.
காவல் நிலைய தாக்குதலின்போது, உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டது. அங்கிருந்து கலைந்து சென்ற கும்பல், காந்தி நகர் பகுதிக்கு சென்றது. அனைத்து சமூக, மத மக்களும் அங்கு தங்கியுள்ளனர். அங்கு பீதியை ஏற்படுத்த அக்கும்பல் முயன்றது. அதன்பின்னர், காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கும்பல், காவல் நிலையத்திற்குள் இருந்தவர்களை வெளியே வர அனுமதிக்கவில்லை. முதலில் அவர்கள் மீது கற்கள் வீசியும், பின்னர், பெட்ரோல் குண்டுகளை வீசீயும் தாக்குதல் நடத்தினர். காவல் நிலையத்துக்கு வெளியே இருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. போலீஸ் நிலையத்தின் பாதுகாப்பிற்காக மட்டும் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கி பயன்படுத்தப்பட்டது. கும்பலால் காவல் நிலையம் முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது துரதிஷ்டவசமான சம்பவம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
இந்த சம்பவம் வகுப்புவாதமானது அல்ல. இதை வகுப்புவாதமாகவோ, உணர்ச்சிகரமானதாகவோ ஆக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் நைனிட்டால் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்த வன்முறையில் சிக்கி இதுவரை இரண்டு பேர் இறந்துள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்தார்.
முன்னதாக, நாட்டிலேயே முதல் முறையாக, உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.