உத்தரகாண்ட் சுரங்க மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
சார்தாம் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் நகருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில்க்யாரா - தண்டல்கான் பகுதியை இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சுரங்கத்திற்குள் வேலை செய்த 41 தொழிலாளர்களும் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, ஆக்சிஜன், தண்ணீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேசமயம், சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளுக்குள் கிடைமட்ட துளையிடும் இயந்திரத்தைப் பயன்படுத்தி சுரங்கப்பாதையில் குழாய்களைச் செருகி மீட்பு பணிகள் நடைபெற்றன. இதற்கு அமெரிக்காவின் ஆகர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் உள்ளே சிக்கிக் கொண்டதால், பிளான் பி செயல்படுத்தப்பட்டது. அதன்படி, மலைக்கு மேல் இருந்து இயந்திரங்கள் உதவியுடன் செங்குத்தாக துளையிடும் பணிகள் தொடங்கியது.
இதனிடையே, ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் அக்கற்றப்பட்டதால், மீண்டும் பிளான் ஏ-வின் படி மீட்பு பணிகள் தொடங்கியது. இந்த நிலையில், சுரங்கத்தினுள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சுரங்கத்தின் வாய் பகுதியில் இருந்து மொத்தம் 57 மீட்டர் துளையிட வேண்டிய நிலையில், இன்னும் 4 முதல் 5 மீட்டர் மட்டுமே துளையிட வேண்டியுள்ளது. இதற்கு, மேனுவல் ட்ரில்லிங் முறை செயல்படுத்தப்படுகிறது. 3 மீட்டர் அளவுக்கு மேனுவல் ட்ரில்லிங் முடிந்துள்ளதாக நுண்ணிய சுரங்கப்பாதை நிபுணர் கிறிஸ் கூப்பர் தெரிவித்துள்ளார்.
உ.பி., எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை: அமலுக்கு வந்த புதிய உத்தரவு!
சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் எப்போது வேண்டுமானாலும் மீட்கப்படலாம் என்ற நிலையில், 41 பேரின் உறவினர்கள் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 41 தொழிலாளர்களுக்கு தேவையான துணிகள், பொருட்களை தயாராக வைத்திருக்க உறவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு உடனடியாக மருத்து உதவிகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஆம்புலன்ஸ்கல், மருத்துவர்கள் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையும் தயார் நிலையில் உள்ளது. சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்படும் தொழிலாளர்கள் சின்யாலிசூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
இதனிடையே, பிரதமர் மோடி சுரங்க மீட்பு பணி நடவடிக்கைகள் குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.