
நாட்டில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சட்டம்தான் பொது சிவில் சட்டம். மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்கள், பரம்பரை விதிகள், தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றை மாற்றியமைத்து, நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான விரிவான சட்டங்களின் தொகுப்புத்தான் பொது சிவில் சட்டம் எனப்படுகிறது. இந்த பொது சிவில் சட்டம் மத்திய பாஜக அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்று.
பொது சிவில் சட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருப்பினும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம், பொது சிவில் சட்டத்துக்கு எதிராக மிசோரம், கேரளா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனவரி முதல் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படவுள்ளது. உத்தரகாண்ட் மாநில ஆளும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்ற அம்மாநில சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இம்மாதம் கூடவுள்ளது.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையை இந்த மாதம் மாநில அரசு மேற்கொள்ள உள்ளது என அம்மாநில நிதியமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் அரசாங்கம் ஜனவரி மாதம் ஒரு சிறப்பு அமர்வு உட்பட சட்டமன்றத்தின் இரண்டு அமர்வுகளை நடத்தவுள்ளது. அதன் போது, மாநில இட ஒதுக்கீடு மசோதா மற்றும் பொது சிவில் சட்ட மசோதாவை முன்வைக்கும் என தெரிகிறது.
ஜனவரி கடைசி வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ள சிறப்பு அமர்வின் போது பொது சிவில் சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து இந்த அமர்வு கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு அமர்வு பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலுக்காக கூட்டப்படும் என தெரிகிறது.