
உத்தரகாண்டில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் முனைப்பில் உள்ள நிலையில், விட்டதை காங்கிரஸ் கட்சி பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்பட்டுவிட்ட நிலையில், அண்டை மாநிலமான உத்தரகாண்டில் பாஜகவுக்கு இணையாக உள்ள கட்சி காங்கிரஸ் ஆகும். 2000-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதிலிருந்து உத்தரகாண்டில் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சிப் பொறுப்புக்கு வருவதே அதற்கு உதாரணம். கடந்த 2017-ஆம் ஆண்டில் பாஜக ஆட்சியைப் பிடித்த நிலையில், இந்த முறை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. மொத்தம் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்டில் ஆட்சியைப் பிடிக்க 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2017-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 57 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
மிருகப் பலத்தில் பாஜக இங்கு வென்றபோதும் உட்கட்சி பூசல், மேலிட பாஜகவின் வியூகங்கள் போன்றவற்றால் கடந்த 5 ஆண்டுகளில் 3 முதல்வர்கள் இங்கு மாறினார்கள். தற்போது ஆட்சியில் உள்ள புஷ்கர் சிங் தாமி கடந்த ஜூலையில்தான் முதல்வரானார்.பாஜகவுக்குள் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக இத்தேர்தலில் பின்னடைவை சந்திக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், இந்த முறையும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்ற நம்பிக்கையில் பாஜக தலைவர்கள் உள்ளனர். உத்தரகாண்டில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஆட்சியை மாற்றுவதை மக்கள் வாடிக்கையாக வைத்திருப்பதால், அது மீண்டும் ஒர்க் அவுட் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஆளுங்கட்சி மீது வாக்காளர்களுக்கு அதிருப்தி ஏற்படும். ஆனால், பாஜகவை பொறுத்தவரை மத்திய, மாநிலத்தில் பொறுப்பில் இருப்பதால் அதிருப்தி சற்று தூக்கலாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
கொரோனாவுக்குப் பிறகு மக்களின் வாழ்வாதாத்தில் ஏற்பட்ட பாதிப்பு பல மாநிலங்களிலும் ஆளுங்கட்சிக்கு சவாலாகவே மாறின. பின்தங்கிய மாநிலங்களில் இந்தப் பாதிப்பு சற்று அதிகமாகவே இருந்தன. உத்தரகாண்டிலிருந்து வெளி மாநிலங்களுக்கு சென்றவர்கள் கொரோனாவால் வேலை வாய்ப்பை இழந்தது ஆளுங்கட்சிக்கு சவாலாக இருக்கலாம். இத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி, உத்தரகாண்ட் கிராந்தி தள், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இடதுசாரிகள் ஓர் அணியாகப் போட்டியிடுகின்றன. எனவே பேச்சு அளவில் தேர்தலில் 7 முனை போட்டிகள் நிலவுகின்றன என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், தேர்தல் களத்தைப் பொறுத்தவரை பாஜக - காங்கிரஸ் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. பாஜக சார்பில் புஷ்கர் சிங் தாமியும் காங்கிரஸ் சார்பில் ஹரீஷ் ராவத்தும் முதல்வர் வேட்பாளர்களாகப் போட்டியில் உள்ளனர்.
தேர்தலில் 65 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ள நிலையில் இது யாருக்கு சாதகமாகும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானதில் 4 கருத்துக்கணிப்புகள் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்று தெரிவிக்கின்றன. எஞ்சிய 4 கருத்துக்கணிப்புகள் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. பாஜக வெற்றி பெறும் என்று கூறும் கருத்துக்கணிப்புகளில் சராசரியாக காங்கிரஸ் கட்சி 29 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளன. எனவே, போட்டி மிகப் பலமாக இருக்கும் என்றே தெரிகிறது. இதுபோன்ற சூழலில் உத்தர்காண்ட் கிராந்தி தள், பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் வெல்லும் ஒரு சில இடங்களும் முக்கியத்துவம் பெறலாம்.
கடந்த 2012-ஆம் ஆண்டில் பாஜகவும் காங்கிரஸும் இணையாக வென்ற நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி, உத்தரகாண்ட் கிராந்தி தள், சுயேட்சைகளின் உதவியுடன் ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. எனவே, இந்த முறையும் அப்படி நடக்கலாம். நாளை காலை 11 மணிக்கு மேல் ஆட்சி அமைக்கும் கட்சி எது என்பது தெரிய வந்துவிடும்.