Punjab Election 2022: பஞ்சாப்பை அடிச்சுத் தூக்குமா ஆம் ஆத்மி.? மீண்டும் ஆட்சியை கைக்குள் வைக்குமா காங்கிரஸ?

Published : Mar 09, 2022, 09:15 PM IST
Punjab Election 2022: பஞ்சாப்பை அடிச்சுத் தூக்குமா ஆம் ஆத்மி.? மீண்டும் ஆட்சியை கைக்குள் வைக்குமா காங்கிரஸ?

சுருக்கம்

வெளியான வாக்குப்பதிவுக்கு பிந்தைய 9 கருத்துக்கணிப்புகளில் 5 கருத்துக்கணிப்புகள் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்று தெரிவித்துளன. எஞ்சிய 4 கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி முதன் முறையாக பஞ்சாப்பில் ஆட்சிக்கு வரும் என்று கூறியுள்ளன. 

பஞ்சாப்பில் முதன் முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வருமா அல்லது ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்கவைக்குமா என்ற கேள்விக்கு விடை நாளை தெரிந்துவிடும்.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் உத்தரப்பிரதேசத்துக்குப் பிறகு ஆவலோடு எதிர்பார்க்கப்படுவது பஞ்சாப் தேர்தல் முடிவைதான். ஏனெனில், ஐந்து மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலம் இது. வட மாநிலங்களில் பாஜக கோலோச்சும் நிலையில் தடுமாறும் மாநிலம் பஞ்சாப்தான். டெல்லிக்கு அடுத்தப்படியாக ஆம் ஆத்மிக்கு ஆதரவு உள்ள மாநிலமும் இதுதான். அதனால், பஞ்சாப் தேர்தல் முடிவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 117 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப்பில் ஒரே கட்டமாக பிப்ரவரி 20 அன்று தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 71.95 சதவீத வாக்குகள் பதிவாயின.

பஞ்சாப்பில் ஆட்சியைக் கைப்பற்றும் கட்சி 59-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக கேப்டன் அம்ரிந்தர் சிங் பொறுப்பேற்றார். 20 தொகுதிகளுடன் ஆம் ஆத்மி பிரதான எதிர்க்கட்சியானது. பாஜக- சிரோன்மணி அகாலிதளம் கூட்டணி 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3-ஆம் இடத்தைப் பிடித்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்து களமிறங்கின. சிரோன்மணி அகாளிதளம் - பகுஜன் சமாஜ் கட்சி ஒரு கூட்டணியாகக் களமிறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங் தொடங்கிய பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஓர் அணியாகப் போட்டியிடுகிறது.  இவைத்தவிர்த்து இன்னும் சில கூட்டணிகள் களத்தில் இருந்தாலும், போட்டி இந்த 4 கட்சிகள் அல்லது கூட்டணிக்கு இடையேதான்.

பஞ்சாப்பில் வேலையின்மை பல காலங்களாக மைய பிரச்சினையாக இருந்திருக்கிறது. அரசியல் கட்சிகள் வீடுதோறும் வேலை வாக்குறுதியை அள்ளி வீசினாலும், அது நிறைவேறியபாடில்லை. இது பஞ்சாப் அரசியலில் பலமுறை சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. இதுதவிர்த்து, போதைப்பொருள், சுரங்கம், மின்சாரம் உள்ளிட்ட பிரச்சினைகளும் இத்தேர்தலில் முக்கியமானதாக மாறியிருக்கின்றன. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் சுமார் ஓராண்டு போராட்டம் நடத்தினர். அதன் விளைவாகத்தான் அகாளிதளம் பாஜக கூட்டணியை முறித்தது. மேலும் தேர்தலை எதிர்கொள்ளவே மத்திய அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது. இதெல்லாம் இத்தேர்தலில் முக்கியமாக எதிரொலித்தன. 

காங்கிரஸ், பாஜக, சிரோன்மணி அகாலிதளம் போன்ற கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளிவீசினாலும், ஆட்சியை எப்படியும் பிடிக்கும் முனைப்பில் உள்ள ஆம் ஆத்மியின் வாக்குறுதிகள் பேசுபொருளாயின. இலவச மின்சாரம், 18 வயதைத் தாண்டி இளம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000, பேருந்துகளில் இலவசப் பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் தமிழகத்தை ஞாபகப்படுத்தும் அளவுக்கு இருந்தன. பஞ்சாப்பில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும், அகாலிதள்-பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சிக்பிர் சிங் பாதல், ஆம் ஆத்மி சார்பில் நடிகர் பகவத் சிங் மான், பாஜக-பஞ்சாப் லோக் காங்கிரஸ் கூட்டணி சார்பில் அஸ்வினி குமார் சர்மா அல்லது கேப்டன் அம்ரிந்தர் சிங் ஆகியோர் முதல்வர் போட்டியில் இருக்கிறார்கள். 

இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து கட்சியிலிருந்து பிரிந்து அம்ரிந்தர் சிங் புதிய தொடங்கி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பையும் சவாலையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வேளாண் சட்டங்கள் மற்றும் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் போன்றவற்றுக்கு பாஜக காரணம் என்பதால், காங்கிரஸ் கட்சி தெம்பாகவே இருக்கிறது. தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே பலத்தப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதை கருத்துக்கணிப்பு முடிவுகளும் உறுதிப்படுத்திகின்றன. வெளியான வாக்குப்பதிவுக்கு பிந்தைய 9 கருத்துக்கணிப்புகளில் 5 கருத்துக்கணிப்புகள் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்று தெரிவித்துளன. எஞ்சிய 4 கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி முதன் முறையாக பஞ்சாப்பில் ஆட்சிக்கு வரும் என்று கூறியுள்ளன. தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரும் நிலையில் மதியத்துக்கு மேல் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்பது தெரிந்துவிடும்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம்.. திருப்பதி திருட்டு வழக்கில் ரவிக்குமார் வாக்குமூலம்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!