உத்ராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது
நாட்டில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சட்டம்தான் பொது சிவில் சட்டம். மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்கள், பரம்பரை விதிகள், தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றை மாற்றியமைத்து, நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான விரிவான சட்டங்களின் தொகுப்புத்தான் பொது சிவில் சட்டம் எனப்படுகிறது. இந்த பொது சிவில் சட்டம் மத்திய பாஜக அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்று.
ஆனால், பொது சிவில் சட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சட்டத்துக்கு எதிராக மிசோரம், கேரளா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
இதனிடையே, பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களைப் பெறும் புதிய நடைமுறையை சட்ட ஆணையம் அண்மையில் தொடங்கியது. அதன்படி, பலரும் தங்களது கருத்துக்களை அனுப்பினர். இந்த சட்டமானது இந்திய சட்ட ஆணையத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உத்ராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அம்மாநில பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா தாக்கலின்போது, ஜெய்ஸ்ரீராம், வந்தே மாதரம் போன்ற முழக்கங்கள் அவைக்குள் எழுப்பப்பட்டன. இருப்பினும், எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் அம்மாநில சட்டப்பேரவை பிற்பகல் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டங்களை பரிந்துரைக்கும், பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு அம்மாநில அமைச்சரவை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவானது சட்டப்பேரவையில் நிறைவேறிய பிறகு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்ததும் சட்டமாகும். கடந்த 2022ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது, தனது தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த் கெஜ்ரிவால் தனி செயலாளர், ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான ஹரிஷ் ராவத் இதுகுறித்து கூறுகையில், “மாநில அரசும், முதல்வரும் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற ஆர்வமாக உள்ளனர். அதில், எந்த விதிகளும் பின்பற்றப்படவில்லை. யாரிடமும் வரைவு நகல் இல்லை. இதன் மீதான விவாதம் நடத்த வேண்டும். மத்திய அரசு உத்தரகாண்ட் போன்ற உணர்வுப்பூர்வமான மாநிலத்தை அவர்களின் சுயநலத்துக்கு பயன்படுத்துகிறது. பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டுமானால், அதை மத்திய அரசு கொண்டு வந்திருக்க வேண்டும்.” என்றார்.
காங்கிரஸ் தலைவர் யஷ்பால் ஆர்யா கூறும்போது, “அவர்கள் வரை மசோதாவை கொண்டு வருகிறார்களா? அல்லது சட்ட மசோதாவை கொண்டு வரப்போகிறார்களா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. பொது சிவில் சட்டம் தொடர்பான விரிவான விவாதம் நடத்த வேண்டும்.” என வலியுறுத்தினார்.
மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய்: குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து!
முன்னதாக, பொது சிவில் சட்டம் இந்திய சட்ட ஆணையத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார். “பொது சிவில் சட்டம் மத்திய அரசின் பிரச்சினை மட்டுமல்ல; அரசியல் சாசனம் உருவாக்கப்படும் போது கூட அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் இதைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள். வேண்டுமென்றால் மாநிலங்கள் அதை சரிசெய்யலாம் அல்லது மேம்படுத்தலாம். கோவா அரசு இதுதொடர்பாக ஏற்கனவே பணிகளை மேற்கொண்டுள்ளது.” எனவும் அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார்.
முன்னதாக, பொது சிவில் சட்ட மசோதாவைத் தயாரிக்க, உத்தரகாண்ட் அரசு, 2022ல், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில், ஓய்வுபெற்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி, சமூக ஆர்வலர் மனு கவுர், முன்னாள் தலைமைச் செயலர் சத்ருகன் சிங், டூன் பல்கலைக்கழக துணைவேந்தர் சுரேகா டங்வால் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவை அமைத்தது. அக்குழுவினர், நான்கு தொகுதிகளாக 740 பக்கங்கள் கொண்ட ஒரு விரிவான வரைவைத் தயாரித்து அரசிடம் சமர்ப்பித்தனர்.