
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 15 என்கவுன்ட்டர்கள் நடைபெற்றுள்ளன. இதில் ஒரு ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார். 24 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. முதல்வராக பதவியேற்ற யோகி, லக்னோ உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களின் காவல் நிலையங்களுக்கு சென்று அதிரடி ஆய்வு நடத்தினார்.
அப்போது பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேசத்தில் பதுங்கியுள்ள குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் அல்லது என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். அதன்பின் மாநிலம் முழுவதும் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
கடந்த 10 மாதங்களில் 950-க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் நடைபெற்றுள்ளன. இதில் 30 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 196 ரவுடிகள் படுகாயம் அடைந்தனர். மாநில போலீஸ் தரப்பில் 5 பேர் பலியாகினர். 212 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் 15 என்கவுன்ட்டர்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் முஸாபர் நகரின் நாக்லாக்கேபேட் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி இந்தர்பால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மீது கொலை, கொள்ளை என 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோன்று ஷாம்லி, கான்பூர், சஹரான்பூர், லக்னோ, பாக்பத், கோரக்பூர், ஹபூர், மீரட் பகுதிகளைச் சேர்ந்த 24 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதிகமான என்கவுண்ட்டர்கள் செய்யப்படுவது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாநில டிஜிபி, உத்தர பிரதேசத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அனைத்து ரவுடிகளையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆனால் சில இடங்களில் அதிரடிப் படை வீரர்கள் மீது தாத்குதல் நடத்தப்படுவதால் தற்காப்புக்காக துப்பாக்கியை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவித்தார்.