
இந்தியா பொறுமை காப்பதை பலவீனமாக கருதக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எல்லை மீறி இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி பயங்கரவாதிகள் நடத்துவதை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது என இந்திய அரசு குற்றம்சாட்டிவருகிறது.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக உலகநாடுகளை திரட்டும் பணியில், பிரதமர் மோடி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. ஆனால், பயங்கரவாத ஊக்குவிப்பை பாகிஸ்தான் நிறுத்துவதாக இல்லை.
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியா தரப்பில் பலமுறை பாகிஸ்தான் அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டும் அத்துமீறிய தாக்குதல்கள் நின்றபாடில்லை.
இந்நிலையில், திரிபுரா சட்டமன்ற தேர்தலை ஒட்டி அங்கு பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், காஷ்மீரில் அமைதியை குலைக்க பாகிஸ்தான் முயல்கிறது.
கடந்த இரண்டு வாரங்களில் பாகிஸ்தானின் பீரங்கி குண்டுகள் தாக்குதலில் 8 அப்பாவிகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் பொருட்டு, 4 நாட்களுக்கு முன்பு இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் கொடி அணிவகுப்பு நடத்தினர். ஆனால், அதன்பிறகும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிவருகிறது.
இந்தியா பொறுமை காப்பதை பாகிஸ்தான் பலவீனமாக கருதக்கூடாது. இந்தியா பலம் வாய்ந்த நாடு என பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார்.