
சுற்றுலா தல பட்டியலில் இருந்து தாஜ்மஹால் இடம் பெறாதது குறித்து உத்திரபிரதேச அமைச்சர் ஆர்.பி. ஜோஷி விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் யமுனை ஆற்றின் கரையில் தாஜ்மகால் அமைந்துள்ளது. இது சர்வதேச அளவில் 7-வது உலக அதிசயமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலின் பெரும் பகுதி பொதுமக்களுக்காக இன்றளவும் திறந்துவிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
உலகிலேயே காதலுக்காக கட்டப்பட்ட மிகப்பெரிய மாளிகை என்ற சிறப்பு தாஜ்மகாலுக்கு உண்டு. ஆனால், தாஜ்மகால் குறித்து பல்வேறு கருத்துகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் கூறப்பட்டு வருகிறது.
தாஜ்மகாலை பார்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். வெளிநாட்டினர் மட்டுமல்ல; இந்தியாவில் இருந்தும் மக்கள் தாஜ்மகாலைக் கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தாஜ்மகால் சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது.
இதையடுத்து உத்திரபிரதேச அமைச்ச்ர் ஆர்.பி. ஜோஷி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது, மாநில அரசு வெளியிட்ட கையேடு சுற்றுலாத் தலங்களின் பட்டியல் இல்லை எனவும், மாநிலத்தில் உள்ள பல சுற்றுலாத் தலங்களின் அழகை மேம்படுத்துவதற்காக அரசு 156 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதற்கான பெயர்கள் மட்டுமே அந்த புத்தகத்தில் இடம் பெற்றிருந்தன எனவும் தெரிவித்தார்.
தாஜ்மகால் ஏற்கனவே புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்வதாகவும், அதனை மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்ட ஜோஷி, அதனால் தான் தாஜ்மகாலின் பெயர் அந்த கையேட்டில் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.