
உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 80 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளையோ அவர்களின் கோரிக்கைகள் குறித்தோ மத்திய அரசோ மாநில அரசோ கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் இல்லத்தின் முன் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் கலைத்தனர்.
மீண்டும் ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இந்நிலையில், 80 நாட்களாக போராட்டம் நடத்தும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக்கூறி உச்சநீதிமன்ற வளாகத்தில் தமிழக விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர். விவசாயிகளைக் கலைந்துபோக சொல்லி போலீசார் வலியுறுத்துவதால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.