
ஆந்திர மாநிலம், கர்ணூல் மாவட்டத்தில் ஆயுதபூஜையையொட்டி உருட்டைக் கட்டையால் தாக்கிக் கொள்ளும் வினோத திருவிழாவில் ஒருவர் உயிரிழந்தார், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆந்திரா மாநிலம், கர்ணூல் மாவட்டத்தில் தேவரா கட்டா எனும் கிராமத்தில் ஒவ்வொரு ஆயுதபூஜையன்று மாலம்மாள் மல்லேஸ்வரி கோயில் திருவிழா நடப்பது வழக்கமாகும். அப்போது “பான்னி அல்லது கரலா சாமரம்” என்ற விழாவை இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களும், சுற்றுபுற கிராமங்களைச் சேர்ந்தவர்களும் நடத்துகின்றனர்.
இந்த பண்டிகையை கொண்டாட்டத்தின் போது, இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் உருட்டைக் கட்டையால் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் வினோத வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது கடவுளுக்கும், தீயசக்திக்கும் இடையிலான போர் என நம்புகின்றனர். இந்த திருவிழாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் தரப்படுகிறது.
இந்த நிலையில், தேவரா கட்டா கிராமத்தில் சனிக்கிழமை இரவு நடந்த உருட்டைகட்டையால் தாக்கிக்கொள்ளும் திருவிழாவில் இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவேசமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 60வயதான எரண்ணா என்பவர் உயிரிழந்தார். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தநர்.
இது குறித்து உள்ளூர் மக்கள் தரப்பில் கூறப்படுவதாவது, “ தேவரா கட்டா கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக இந்த விழா எடுக்கப்படுகிறது. சிவனுக்கும், அரக்கர்களுக்கும் நடக்கும் போராக பாவிக்கப்படுகிறது. இந்த விழாவில் இந்த ஆண்டு 3,500 பேர் கலந்து கொண்டனர். நீரடிக்கி, நெரனிக்கிடான்டா, கொத்தபேட்டா ஆகிய கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவனை வழிபடுபவர்கள். எலராட்டி, மடிகேரி, நிதராநட்டா, சுலைவை, ஹெபிட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அரக்கர்களை வழிபடுவர்கள் . மல்லேஸ்வரம் கோயிலில் இருந்து உற்சவர் புறப்பட்டவுடன் அதை யார் கைப்பற்றுவது என இரு பிரிவினருக்கும் இடையே உருட்டுக்கட்டையால் சண்டை நடக்கும் இதில் வெற்றிபெறுவர்கள் உற்சவரைக் கைப்பற்றுவார்கள்” என்று தெரிவித்தனர்.
இந்த விழாவில் சுலவை கிராமத்தைச் சேர்ந்த எர்ரணா என்பவர் உயிரிழந்தபோதிலும், மாரடைப்பு என்றே போலீசார் கூறுகின்றனர், மேலும், காயமடைந்த 60 பேரில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டையால் தாக்கிக்கொள்வதற்கு பாதுகாப்பு அளிக்க 1500 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால்,யாரும் தடுக்கவில்லை என்பதுதான் வேதனைக்குரியதாகும்.