
டெல்லி, உத்தரகாண்ட் பகுதியில் திடீர் நிலநடுக்கம் : ரிக்டர் அளவு கோளில் 5.8 ஆக பதிவு!
டெல்லி, உத்தரகாண்ட் உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5 புள்ளி 8 ஆக பதிவானது.
டெல்லி, உத்தரகாண்ட் உட்பட வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10.30 மணியளவில் நிலஅதிர்வு உணரப்பட்டது.
இந்த நில அதிர்வு 30 விநாடிகள் வரை நீடித்தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனுக்கு அருகே ருத்ரபிரயாக் பகுதிக்கு அருகே இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. பூமிக்குக் கீழே 14 புள்ளி 2 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு சார்பில் துரித நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மீட்புப்பணி, நிவாரணம் உள்ளிட்ட உதவிகளை செய்ய விரைந்தனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் 90 பேர் கொண்ட இரு குழுக்கள் உத்ரகாண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்திலும், காசியாபாத்திலும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். உத்தரகாண்ட் மற்றும் நிலஅதிர்வு ஏற்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
நிலஅதிர்வால் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.