இந்தியப் பிரதமர் மோடியின் வருகைக்காக அமெரிக்கா ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருப்பதாக அந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் ஒருங்கிணைப்பாளரும், திட்ட அதிகாரியுமான ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு இந்த மாதம் அரசு முறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜான் கிர்பி, ''இந்தியாவும், அமெரிக்காவும் பாதுகாப்பு கூட்டாளிகள். குவாட் அமைப்பில் இருவரும் கூட்டாளிகளாக உள்ளனர்'' என்றார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்தியப் பிரதமர் மோடியும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பார்களா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ''அதுபற்றி தற்போது எதுவும் தெரியவில்லை. முழு நிகழ்ச்சி நிரல் இன்னும் தயாராகவில்லை. ஆனால், பிரதமர் மோடியை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறோம். குவாட் மட்டுமின்றி இந்தோ பசிபிக் பாதுகாப்பிலும் இந்தியாவுடன் நாங்கள் கைகோர்த்து இருக்கிறோம். இதுபற்றி நிறைய பேச இருக்கிறோம்'' என்றார்.
ஜூன் 22ல் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்; வெள்ளை மாளிகையில் சிறப்பு விருந்து
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வரும் ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்கா வாழ் இந்தியர்களை அப்போது மோடி சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. மோடியை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது. 22ஆம் தேதி ஜோ பைடன், அவரது மனைவி ஜில் இருவரும் வெள்ளை மாளிகையின் சவுத் லான் பகுதியில் பிரதமர் மோடிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்க இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் 7,000 பேர் கலந்து கொளவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக வாஷிங்டனில் இருக்கும் ஜான் எப் கென்னடி மையத்தில் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை ஜோ பைடனும், மோடியும் சந்திக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா நாடாளுமன்றத்தில் 22 ஆம் தேதி எம்பிக்கள் முன்பு மோடி உரையாற்றுவார். இரண்டு அவைகளிலும் இவரது பேச்சு எதிரொலிக்கும். இந்தியப் பிரதமர் என்ற முறையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறை உரையாற்ற இருக்கும் ஒரே இந்தியப் பிரதமர் மோடி ஆவார்.
பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் அமெரிக்கா.. விரக்தியில் ராகுல்காந்தி மற்றும் நண்பர்கள்..