ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்தடைந்தார்
ஜி20 உச்சிமாநாட்டின் முதன்மை அமர்வு கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஜி20 தலைவர்கள் மற்றும் ஏரளமான தலைவர்கள், பிரதிநிதிகள் டெல்லிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்தடைந்துள்ளார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று காலை அமெரிக்காவில் இருந்து கிளம்பிய ஜோ பைடனின் விமானம் ஜெர்மனியில் சிறிது இடைநிறுத்தம் செய்த பிறகு, இந்தியா வந்தடைந்துள்ளது.
undefined
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய தலைவர்கள் இடையே இன்று இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதற்காக, இன்னும் சற்று நேரத்தில் ஜோ பைடன் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின்போது, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பலதரப்பு முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஜி20: உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் - பிரதமர் மோடி!
தொடர்ந்து, நாளை காலை ஜி20 உச்சி மாநாட்டின் முதல் அமர்வில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்ளவுள்ளார். பின்னர், அன்றைய தினம் பிற்பகலில் இரண்டாவது அமர்வு கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். நாளை இரவு ஜி20 தலைவர்கள் உடனான இரவு விருந்து மற்றும் கலாசார நிகழ்ச்சிகளிலும் ஜோ பைடன் கலந்து கொள்ளவுள்ளார்.
இதையடுத்து, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை ஜி20 தலைவர்களுடன் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு செல்லும் ஜோ பைடன், தனது இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லியில் இருந்து நேரடியாக வியட்நாமுக்கு செல்லவுள்ளார்.
முன்னதாக, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருடன் பிரதமர் மோடி தமது இல்லத்தில் இன்று மாலை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.