இந்தியாவில் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க ஆணையம் ஒன்று விசாரணை நடத்தவுள்ளது.
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்பான விசாரணையை அடுத்த வாரம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய இரு தலைவர்களுக்கும் இடையே இரண்டு முறை வெற்றிகரமான இரு தரப்பு பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் வாஷிங்டனிலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜி20 மாநாட்டிற்கு இடையே டெல்லியிலும் என இரண்டு முறை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக அமைந்தது எனவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளதாக அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது.
மத மீறல்களை நிவர்த்தி செய்ய அமெரிக்க அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பது குறித்து அமெரிக்க காங்கிரஸின் விசாரணை நடத்தப்பட்டதாகவும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க காங்கிரஸின் சட்ட நூலகத்தின் வெளிநாட்டு சட்ட வல்லுனர் தாரிக் அகமது, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் வாஷிங்டன் இயக்குனர் சாரா யாகர், மனித உரிமைகளுக்கான இந்துக்கள் அமைப்பின் நிர்வாக இயக்குநர் சுனிதா விஸ்வநாத், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் இந்திய அரசியல் பேராசிரியர் இர்பான் நூருதீன், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பெர்னாண்ட் டி வரேன்ஸ் ஆகியோர் ஆணையத்தின் முன்பு சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார்.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.450: அரசு அதிரடி அறிவிப்பு!
அமெரிக்காவிற்கு பிரதமர் மோடியின் அரசுமுறை பயணம் இரு நாட்டிற்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவை பிரதிபலிக்கிறது. இருப்பினும், “கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசாங்கம் மத சிறுபான்மையினரை இலக்காகக் கொண்டு பாரபட்சமான கொள்கைகளை இயற்றியது மற்றும் அமல்படுத்தியது. மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள், பசு வதைச் சட்டங்கள், மதத்தின் அடிப்படையில் குடியுரிமை விருப்பங்களை வழங்கும் சட்டம் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதியுதவி மீதான கட்டுப்பாடுகளை விதித்தது.” என சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது.
“சமீபத்திய சம்பவங்களாக, ஹரியானாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. மணிப்பூரில் கிறிஸ்தவ மற்றும் யூத சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆகியவை இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தணிக்க புதிய உத்திகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன.” எனவும் அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது.
மதச் சுதந்திரத்தின் மிக மோசமான மீறல்களுக்காக இந்தியாவை குறிப்பிட்ட அக்கறை கொண்ட நாடாக அறிவிக்க வேண்டும் என 2020ஆம் ஆண்டு முதலே அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) பரிந்துரை செய்து வருகிறது.
“இந்திய அரசாங்கத்தின் சட்ட கட்டமைப்பு மற்றும் பாரபட்சமான கொள்கைகளை அமலாக்கம் செய்வது, தற்போதைய மத சுதந்திர நிலைமைகளை விளக்குவது, நாட்டில் மத சுதந்திரம் தொடர்புடைய மனித உரிமைகள் மீறப்படுவதை எதிர்த்துப் போராட இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கான கொள்கை விருப்பங்களை சாட்சிகள் வழங்குவார்கள்.” எனவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.