
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய குடிமகனான தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய ராணாவை இந்தியா நீண்ட காலமாக நாடு கடத்தக் கோரிவரும் நிலையில் அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த அனுமதி கிடைத்துள்ளது.
நிவாரணம் பெறுவதற்காக பல மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்த ராணா, நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கான கடைசி முயற்சியாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை நாடினார். தனக்கு இந்தியாவில் இரட்டை ஆபத்து இருப்பதாகக் குறிப்பிட்டு கீழ்மை நீதிமன்றத்தின் நாடு கடத்தல் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரினார். இருப்பினும், உச்ச நீதிமன்றம் ஜனவரி 21ஆம் தேதி அவரது மனுவை நிராகரித்துவிட்டது. இதன் மூலம் அவரை நாடு கடத்த அமெரிக்கா அரசு தரப்பில் தடை ஏதும் இல்லாத சூழல் உருவாகி இருக்கிறது.
ராணா தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட 2008 மும்பை வெடிகுண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டதாக ராணா மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. தாக்குதலின் முக்கிய சதிகாரர்களில் ஒருவரான பாகிஸ்தானிய-அமெரிக்க பயங்கரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லியுடன் சேர்ந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் தான் சமர்ப்பித்த மனுவில், சிகாகோவில் நடைபெற்ற வழக்கில் தான் விடுவிக்கப்பட்டதைச் சுட்டிக்காடினார். இந்தியாவின் தனக்கு இரட்டை ஆபத்து உள்ளது என்றும் ராணா வாதிட்டார். ஆனால் அமெரிக்க அரசாங்கம் இதை ஏற்கவில்லை. அமெரிக்க சோலிசிட்டர் ஜெனரல் எலிசபெத் பி. ப்ரெலோகர், ராணாவின் மனுவை நிராகரிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் வலியுறுத்தினார். இந்தியா அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளும் அமெரிக்காவில் அவர் விடுவிக்கப்பட்ட வழக்கில் அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளும் ஒரே மாதிரியானவை அல்ல என்றும் ப்ரெலோகர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முடிவால், ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது உறுதியாகிவிட்டது.