
செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆதார் பதிவு மையங்களை தனியார் அமைப்பிடம் இருந்து மாற்றஇ, அரசு அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் மாற்றப்பட உள்ளது.
இது தொடர்பாக ஆதார் வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு, அனைத்து மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாக கடந்த மாதம் 28-ந் தேதி முறைப்படி கடிதம் எழுதியுள்ளது. இம்மாதம் 31-ந் தேதிக்குள், ஆதார் மையங்களுக்கான அலுவலங்களை தயார் செய்யும் படியும் கேட்டுக்கொண்டுள்ளது.
25 ஆயிரம் மையங்கள்
இந்த நடவடிக்கை மூலம் நாடு முழுவதும் இயங்கிவரும் 25 ஆயிரம் ஆதார் பதிவு மையங்கள், அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும்.
மேலும் தனியார் நிறுவனங்கள் ஆதார் பதிவு செய்வதற்கு நாளுக்கு நாள் அதிகமான கட்டணத்தை அரசிடம் இருந்து வசூலித்து வருவது தடுக்கப்படும், ஆதார் பதிவு, கூடுதல் விவரங்களை பதிவு செய்வது ஆகியவற்றை அரசு கூர்ந்து கண்காணிக்க முடியும்.
இது குறித்து டெல்லியில் நேற்று யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பூஷான் பாண்டே கூறியதாவது -
தாலுகாவுக்கு 3 மையம்
அரசு அலுவலகங்களிலேயே ஆதார் மையத்தை உருவாக்கக் கோரி, அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் கடந்த மாதம் 28-ந் தேதி கடிதம் எழுதி இருக்கிறோம். விரிவான பதிலையும் அலுவலகத்தையும் ஒதுக்கி இம்மாதம் 31-ந் தேதிக்குள் பதில் அனுப்ப கேட்டுள்ளோம். தாலுகா ஒன்றுக்கு 3 அலுவலகங்களை உருவாக்க அறிவறுத்தியுள்ளோம்.
ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் நாட்டில் தனியார் மூலம் பதிவு செய்யப்படும் ஆதார் மையங்கள் அனைத்தும், அரசுக்கு மாற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
அரசின் கண்காணிப்பில்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் ஆதார் மையம் அமைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் பதிவு செய்யும் மையம் அரசின் நேரடி கண்காணிப்பில் கட்டுப்பாட்டில் வரும்.
புகார்கள்
பல நேரங்களில் ஆதார் மையத்துக்கு மக்கள் செல்லும் போது பூட்டி இருப்பதாவும், முறையாக விவரங்களை பதிவு செய்யாமல் விட்டுவிடுவதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக, அரசின் வசம் ஆதார் மையங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அனைத்து சேவைகள்
வரும் காலங்களில் வங்கிகள், மருத்துவமனைகள், தாலுகா அலுவலகங்கள் போன்றவற்றில் ஆதார் மையங்கள் இயங்கவும், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், புதிய பான் கார்டு, ஜி.எஸ்.டி போன்ற பணிகளை ஆதார் மையத்திலேயே மேற்கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.