
உலக வேலை வாய்ப்பு தொடர்பான இன்றைய போட்டியில் சந்தையில் கல்வியானது மிகவும் முக்கியமாக உள்ளது. அந்த வகையில் கல்விக்காக பெற்றோர்கள் தங்களுடைய தனிப்பட்ட, வாழ்க்கை முறை மற்றும் நிதி தியாகங்களை தங்களின் குழந்தைகளுக்காக அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய பெற்றோர்கள், தங்களுடைய குழந்தையின் தொடக்க கல்வி முதல் இளங்கலை பட்டப் படிப்பிற்கு ரூ.12.22 லட்சம் செலவு செய்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
எச்.எஸ்.பி.சி. என்ற நிறுவனம் கல்வி மதிப்பு என்ற தலைப்பில் ஆய்வு ஒன்று நடத்தியது. ஆஸ்திரேலியா, கனடா, சீனா, எகிப்து, பிரான்ஸ், ஹாங்காங், இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, மெக்சிகோ, சிங்கப்பூர், தைவான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நாடுகளில், ஹாங்காங்கில், பெற்றோர்கள் குழந்தையின் படிப்பு செலவிற்காக ரூ.85 லட்சம் வரை செலவு செய்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு எமிரெட்சில் ரூ.64 லட்சம் வரையிலும், சிங்கப்பூரில் ரூ.46 லட்சம் வரையிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செலவிடப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில், பெற்றோர்கள் குழந்தையின் படிப்பு செலவிற்கு அதாவது பள்ளி முதல் பல்கலைக்கழகம் மற்றும் புத்தகங்கள், போக்குவரத்து, தங்கும் வசதி உள்பட ரூ.12.22 லட்சம் வரை செலவு செய்வதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட 15 நாடுகளில் இந்தியா 13-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கு அடுத்ததாக, எகிப்து, பிரான்ஸ் நாடுகள் பிடித்துள்ளன. இங்கு குழந்தையை படிக்க வைக்கும் செலவானது ரூ.10 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.