யோகி ஆதித்யநாத் ஆட்சி மீண்டும் அமைவதுதான் உத்தர பிரதேசத்திற்கு நல்லது..! மக்கள் அமோக ஆதரவு

By karthikeyan VFirst Published Aug 18, 2021, 5:23 PM IST
Highlights

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி அமைவதே மாநிலத்திற்கு நல்லது என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அடுத்த ஆண்டு முடிவுக்கு வருகிறது. 

இதையடுத்து அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஏசியாநெட் சார்பில் சர்வே எடுக்கப்பட்டது. கான்பூர், மேற்குப்பகுதி, ஆவாத், ப்ரிஜ், காசி மற்றும் கோரக்‌ஷ் ஆகிய 6 மண்டலங்களில் கடந்த ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை 4200 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.

யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள், எந்த ஆட்சி அமைவது உத்தர பிரதேச மாநிலத்துக்கு நல்லது, எந்தெந்த விவகாரங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும், யோகி ஆதித்யநாத் ஆட்சி மீதான மதிப்பீடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதில், யோகி ஆதித்யநாத் - அகிலேஷ் யாதவ் ஆகியோரில் யாருக்கு உங்கள் ஓட்டு என்ற கேள்விக்கு 48% பேர் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கே தங்கள் ஓட்டு என்று கருத்து கூறியுள்ளனர். 36% பேர் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு என்றும், 16% பேர் மற்றவர்களுக்கு என்றும் கருத்து கூறியுள்ளனர்.

யோகி ஆதித்யநாத் அரசு கொரோனா பெருந்தொற்று காலத்தை எப்படி கையாண்டது என்ற கேள்விக்கு, 23% பேர் மிகச்சிறப்பு என்றும், 22% பேர் சிறப்பாக என்றும் கருத்து கூறினர். 32% பேர் பரவாயில்லை என்றும், 13% பேர் மட்டுமே மோசம் என்றும் கருத்து கூறினர். இதன்மூலம் உத்தர பிரதேச மக்களிடையே யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவு இருப்பது தெரியவருகிறது.

எந்த அரசாங்கம் அமைவது உத்தர பிரதேசத்திற்கு நல்லது என்று கேட்கப்பட்ட கேள்விக்கான, மண்டல வாரியான மக்கள் அளித்த பதிலை பார்ப்போம்.

கான்பூரில் 56% பேர் மீண்டும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு என்றும், 32% பேர் இம்முறை அகிலேஷ் யாதவுக்கு வாய்ப்பளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

காசியில் 51% பேர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவாகவும், 39% பேர் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். 

ப்ரிஜ்-ல் 51% பேர் யோகி ஆதித்யநாத்தே மீண்டும் முதல்வராக வேண்டும் என்றும், வெறும் 22% பேர் மட்டுமே அகிலேஷ் யாதவுக்கு இம்முறை வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

ஆவாத்-ல் 63% பேரின் ஆதரவு யோகி ஆதித்யநாத்துக்கும் இருக்கும் நிலையில், அதில் கிட்டத்தட்ட பாதியளவில் வெறும் 32% பேர் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கோரக்‌ஷில் 51% பேர் யோகிக்கும், 40% பேர் அகிலேஷுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  ஒட்டுமொத்தமாக 48% பேர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவாகவும், 40% பேர் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாகவும் கருத்து கூறியுள்ளனர்.

இந்த சர்வே மூலம், உத்தர பிரதேச மக்கள் மீண்டும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசையே விரும்புகின்றனர் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
 

click me!