
விமானம் புறப்படுவதை தாமதம் செய்து, ஊழியர்களுடன் வாக்குவாதம், தகராறில் ஈடுபட்டால், அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை அபராதம் விதிக்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
விமானம் புறப்படுவதில் ஒருமணி நேரம் தாமதம் செய்தால் ரூ. 5 லட்சம், 2 மணிநேரம் தாமதம் செய்தால் ரூ.10 லட்சம், 2 மணிநேரத்துக்கு அதிகமாக தாமதம் செய்தால் ரூ.15 லட்சம் அபராதம் விதிக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த சில மாதங்களில் ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள், எம்.பி.க்கள், வி.வி.ஐ.பி.க்களால் சில விரும்பத்தகாத சம்பவங்களை சந்தித்துவிட்டனர். இதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படஉள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம், திருப்பதியில் ஏர் இந்தியாவில்பயணிக்க வந்த ஓய்.எஸ்.ஆர். கட்சி எம்.பி. தாமதமாக வந்தார். அது குறித்து கேட்ட விமான ஊழியரை அவர் கன்னத்தில் அறைந்தார். கடந்த மாதம், சிவசேனா கட்சி எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், ஏர் இந்தியா மேலாளரை செருப்பால் அடித்தார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஊழியருடன் தகராறு செய்தார். இந்த சம்பவங்களால் விமான ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர், விமானம் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இந்த சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வரவே அபராதம் விதிக்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஸ்வானிலோஹானி கூறுகையில், “ ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நலன்களைக் காக்க, விமானத்தில் தகராறு செய்யும், விமானத்தை புறப்படவிடாமல் தாமதம் செய்யும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.
அவ்வாறு விமானத்தில் தகராறு செய்யும் பயணிகள் குறித்து தாமதிக்காமல் விமானநிலைய மேலாளரிடம் முதலில் புகார் அளிக்கப்படும். அதன்பின் அந்தபுகார் விமானநிறுவனத் தலைவருக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும், போலீசில் உடனுக்குடன் புகார் செய்யப்பட்டு, எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும். பயணிகள் தகராறு செய்ததில் ஏதேனும் பொருட்கள் உடைந்து இருந்தால், அதற்குரிய கட்டணத்தை பெறுவோம். விமானத்தை புறப்படத் தாமதம் செய்து இருந்தால், ரூ. 5 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.