
தெலங்கானா அரசு முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 12 சதவீத இட ஒதுக்கீடு அளித்து நிறைவேற்றிய மசோதா என்பது குப்பையில் வீசி எறிய வேண்டிய காகிதம் மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்காது என்று பாரதிஜனதா கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இட ஒதுக்கீடு மசோதா
தெலங்கானா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை 4 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டு, முதல்வர் சந்திரசேகர் ராவ் நேற்று முன் தினம் மசோதாவை நிறைவேற்றினார். இந்த மசோதா நிறைவேற்றியதற்கு பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் தெலங்கானா பா.ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ்நேற்று ஐதராபாதில் பேட்டி அளித்தார்.
நிராகரிக்கும்
அப்போது அவர் கூறுகையில், “ இந்த விவகாரத்தை பாரதிய ஜனதா கட்சி சரியாகப் பயன்படுத்தி தங்களை உயர்த்திக்கொள்ளும். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் உண்மையான முகத்தை மக்களிடத்தில் தெரியவைப்போம். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு மசோதாவை தொடக்க நிலையிலேயே மத்திய அரசு நிராகரிக்கும்.
குப்பை காகிதம்
மதரீதியாக இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது. உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் இட ஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கு அதிகமாகச் செல்லக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளதால், இந்த மசோதாவுக்கு செல்லாது. இந்த மசோதா நிறைவேற்றிய விதத்திலும் சட்ட விதிகளை பின்பற்றவில்லை, இது குப்பையில் வீசிய வேண்டிய காகிதம். இதற்கு சட்ட பாதுகாப்பு இல்லை. நீதிமன்றத்தின் ஆய்வுகளிலும் இந்த மசோதா தோல்வி அடையும்.
நகர்த்த முடியாது
புவனேஷ்வர் நகரில் நடந்த பாரதிய ஜனதா தேசிய செயற்குழுக் கூட்டத்திலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆதலால், இந்த மசோதா அடுத்த கட்டத்துக்கு தெலங்கானா அரசால் நகர்த்த முடியாது.
வரவேற்பு
இந்த மசோதாவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்களை பா.ஜனதா கட்சி நடத்தும். அதேசமயம், பழங்குடியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததை வரவேற்கிறோம்’’ என்று தெரிவித்தார்.