அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐக்கிய நாடுகள் சபை கருத்து தெரிவித்துள்ளது
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அவருக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பியது. இதுவரை 9 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. அந்த சம்மன்கள் முறைகேடானது என கூறிய அவர், சம்மன்களை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இப்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை கைது செய்துள்ளனர். வருகிற 31ஆம் தேதி வரை அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவரை ஏப்ரல் 1ஆம் தேதி காலை ஆஜர்ப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து உலக நாடுகள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது. ஆனால், அத்தகைய கருத்துக்கள் இந்திய இறையான்மைக்கு எதிரானது என இந்தியா கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐக்கிய நாடுகள் சபை கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் உட்பட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்ட வேண்டும் என ஐநா சபை செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறும் என ஐ.நா. சபை நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடி வரி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!
முன்னதாக, செய்தியாளர் சந்திப்பின்போது அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர், “இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது கவலை அளிக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு நாங்கள் கருதுகிறோம், எதிர்பார்க்கிறோம். நீதித்துறையின் சுதந்திரம், அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் இந்த வழக்கில் பின்பற்றப்படும் என நாங்கள் நம்புகிறோம். குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் எவரையும் போல, அரவிந்த் கெஜ்ரிவால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியானவர்.” என்றார்.
அதேபோல், அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக நாங்கள் காண்காணித்து வருகிறோம். நியாயமான மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் சட்ட செயல்முறை ஆகியவற்றை அரசு உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையும் கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் செயல் துணை தலைவர் குளோரியா பெர்பெனாவுக்கு நேரில் ஆஜராகுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது.
இந்த நிலையில், அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா சபை கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.