காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடி வரி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது
காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 - 2019 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகள் 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி உள்ளிட்ட அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. அதோடு 45 நாட்கள் தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டதற்காக ரூ.210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி மனுத்தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனுவை தீர்பாயம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் தங்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ரூ.1700 கோடி வரி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 4 நிதி ஆண்டுகளில் ரூ.1,700 கோடிக்கு காங்கிரஸ் கட்சி வரி செலுத்தவில்லை எனக்கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2017-18 முதல் 2020-21 வரை முறையாக வரி செலுத்தாததால் அபராதத்தையும் சேர்த்து செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி, தேர்தல் பணியாற்ற விடாமல் தடுக்கிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கே ஆபத்தானது என குற்றம் சாட்டிய சோனியா காந்தி, காங்கிரஸை நிதி ரீதியாக முடக்குவதற்கு பிரதமர் மோடி திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சாடினார்.
“காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கின்றன. எங்களால் பிரசாரத்துக்கு செலவு செய்ய முடியவில்லை. ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் எங்களால் விளம்பரம் செய்ய முடியவில்லை. எங்கள் தலைவர்கள் விமானத்திலோ, ரயிலிலோ செல்ல முடியவில்லை. இத்தனையும் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு நடக்கிறது. இது காங்கிரஸ் கட்சியை முடக்க பிரதமர் மோடி செய்யும் கிரிமினல் செயல்.” என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.