இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்..? திட்டவட்டமாக தெரிவித்த மத்திய அமைச்சர்

By karthikeyan VFirst Published Jun 7, 2020, 4:20 PM IST
Highlights

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 
 

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால், மார்ச் 25ம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. நான்கு கட்ட ஊரடங்கு மே 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், ஜூன் 1 முதல் நிறைய தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டுவருகிறது. பெரும்பாலும் அனைத்து தொழில்களும் செயல்பட தொடங்கியிருப்பதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். 

ஆனால் பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. மார்ச் 16ம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் எதுவும் திறக்கப்படவில்லை. பொதுவாக மே மாதம் கோடை விடுமுறை முடிந்ததும், ஜூன் மாதம் முதல் புதிய கல்வியாண்டு தொடங்கும்; ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். 

ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது தாமதமாகியுள்ளது.  பள்ளிகள் திறப்பு குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என்று ஊரடங்கு தளர்வு குறித்து மத்திய அரசு வெளியிட்டு இருந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனடிப்படையில், சில முடிவுகளை எடுக்க, அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகுதான் திறக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் திறந்தாலும் சமூக இடைவெளியுடன் எவ்வாறு பள்ளிகளை நடத்துவது என்பது தொடர்பாக ஆய்வு நடைபெறுவதாக ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியிருப்பதால் மாணவர்கள் சந்தேகமோ குழப்பமோ இல்லாமல் இருக்கலாம். 
 

click me!