மாவோயிஸ்ட்டுகள் ஒழிப்பு: முதன்முறையாக ஜார்கண்ட் காவல்துறையை பாராட்டிய மத்திய உள்துறை!

By Manikanda Prabu  |  First Published Oct 19, 2023, 4:40 PM IST

மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஜார்கண்ட் மாநில காவல்துறையை மத்திய உள்துறை அமைச்சகம் முதன்முறையாக பாராட்டியுள்ளது


ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒழிக்க அம்மாநில காவல்துறை எடுத்த நடவடிக்கைகளை முதல்முறையாக மத்திய உள்துறை அமைச்சகம் பாராட்டியுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் மூன்று சிறப்புப் பகுதிக் குழு உறுப்பினர்கள் (எஸ்ஏசி) உட்பட 745 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாநில அரசின் புதிய சரணடைதல் கொள்கையின் கீழ், 38 மாவோயிஸ்டுகள் காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர் என ஜார்க்கண்ட் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

“ஜார்கண்ட் காவல்துறை, சிஆர்பிஎஃப், கோப்ரா மற்றும் ஜார்கண்ட் ஜாகுவார் ஆகியோரால் நடத்தப்படும் அனைத்து வகையான மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளின் மூலம் இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிக்க ஜார்கண்ட் நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பணியை இந்திய அரசின் உள்துறை செயலாளர் பாராட்டியுள்ளார்.” என ஜார்க்கண்ட் காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக, பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் ஐந்து முக்கிய மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டது ஒரு பெரிய சாதனை என ஜார்கண்ட் மாநில போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

“மாவோயிஸ்டுகள் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் கோல்ஹான் பகுதியில் மட்டுமே உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரலில் சத்ரா மாவட்டத்தில் போலீஸ் என்கவுன்டரில் ஐந்து முக்கிய மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற போலீஸ் என்கவுண்டரில் ஒரே நேரத்தில் ஐந்து மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டது இதுவே முதன்முறை.” என ஜார்க்கண்ட் காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் சகர்பந்தாவிலிருந்து வந்து இந்தப் பகுதியில் தஞ்சமடைந்திருந்த மாவோயிஸ்டுகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி மனரீதியாக சிதைத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பாதுகாப்புப் படையினரால் மொத்தம் 745 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டதாக ஜார்க்கண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் மூன்று சிறப்புப் பகுதிக் குழு (எஸ்ஏசி) உறுப்பினர்கள், ஒரு பிராந்தியக் குழு உறுப்பினர், 10 மண்டலத் தளபதிகள், 16 துணை மண்டல தளபதிகள் மற்றும் 25 ஏரியா கமாண்டர்கள் அடங்குவர். பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் 20 மாவோயிஸ்டுகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆயுத பூஜை கொண்டாட்டம்: திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி விளக்கம்!

சத்ராவில் பெரும்பாலான மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தலைக்கு ரூ. 25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட எஸ்ஏசி உறுப்பினர்கள், கவுதம் பாஸ்வான் மற்றும் அஜித் ஓரான், ரூ. 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட துணை மண்டல தளபதிகள் அமர் கஞ்சு மற்றும் அஜய் யாதவ் ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 60 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட்டுகள் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.

2022-23 ஆம் ஆண்டில், பாதுகாப்புப் படையினரின் தீவிர நடவடிக்கை, மாநில அரசின் கவர்ச்சிகரமான மறுவாழ்வு மற்றும் சரணடைதல் கொள்கை காரணமாக 38 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர். இதில் சிறப்புப் பகுதிக் குழு உறுப்பினர் விமல் யாதவ், மண்டலக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் அமன் கஞ்சு, துரியோதன் மஹதோ, இந்தல் கஞ்சு, நான்கு மண்டலத் தளபதிகள், ஒன்பது துணை மண்டலத் தளபதிகள் மற்றும் 10 பகுதித் தளபதிகள் அடங்குவர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் செயல்படும் மற்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் பயனுள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதன் விளைவாக, PLFI தலைவர் தினேஷ் கோப் என்கிற குல்தீப் என்ஐஏ மூலம் கைது செய்யப்பட்டுள்ளார். சரணடைந்த மாவோயிஸ்டுகள் தங்கள் அமைப்புக்கு திரும்பாமல் இருக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, சிபிஐ மாவோயிஸ்டுகளின் கடைசி கோட்டையாக கருதப்படும் மேற்கு சிங்பூமின் கொல்ஹான் காடுகளில் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!