
கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால், ஏழை, எளிய மக்கள், தினக்கூலிகள், மாத ஊதியதாரர்கள், சிறு குறு வணிகர்கள், தொழில் முனைவோர், பெரிய பெரிய உற்பத்தி தொழிற்சாலைகள் வரை அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கால் வருவாயையும் வாழ்வாதாரத்தையும் இழந்த ஏழை, எளிய மக்கள் முதல், தொழில்துறையில் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகள், நஷ்டங்கள் வரை அனைத்து தரப்பையும் கருத்தில்கொண்டு மத்திய நிதியமைச்சகம் பல்வேறு நிதித்துறை சார்ந்த சலுகைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டுவருகிறது.
இந்நிலையில், கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்தவர்களில், கணக்கு சரிபார்க்கப்பட்டு, திருப்பியளிக்கப்பட வேண்டிய தொகை ரூ.5 லட்சத்திற்கு கீழ் இருந்தால், அவர்களுக்கு உடனடியாக அந்த தொகையை திருப்பியளிக்கப்படும் மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்தவர்களுக்கும் ரூ.5 லட்சத்திற்கு கீழ் திருப்பியளிக்க வேண்டியிருந்தால், அந்த தொகை உடனடியாக திருப்பியளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 14 லட்சம் பேர் பயனடைவார்கள் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.