மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது, சில அமைச்சர்களது பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பாஜக உயர்மட்டத் தலைவர்களின் தொடர் ஆலோசனை, பிரதமர் மோடி தலைமையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவை மாற்றம் தொடர்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் பாஜக, கட்சியை பலப்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தெலங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு புதிய பாஜக தலைவர்களை நியமனம் செய்து அக்கட்சி மேலிடம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. மத்திய அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்திகளுக்கு மத்தியில் பாஜக மாநில தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சரவையிலும் விரைவில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 15 பேரில் இருவரது பதவிகள் பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் சந்தொலி எம்.பி.யும், கனரக தொழில்துறை அமைச்சரான மகேந்திர நாத் பாண்டே ஆகிய இரு அமைச்சர்களது பதவியும் மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது பறிக்கப்படலாம் என்கிறார்கள்.
இதில், 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், தனது மகன் ஆசிஷ் மிஸ்ராவின் செயல்களால் அனைத்து தவறான காரணங்களுக்காகவும் தலைப்பு செய்திகளை அஜய் மிஸ்ரா தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் வேளான் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்றதாக அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் ஜாமீனில் வெளியே வந்தாலும், உத்தரப்பிரதேச மாநிலத்துக்குள் நுழைய உச்ச நீதிமன்றம் அவருக்கு அனுமதி மறுத்துள்ளது.
சரத் vs அஜித்: யாருக்கு பலம்? மகாராஷ்டிராவில் இன்று கூட்டம்!
பாஜகவின் முக்கிய பிராமண சமூக முகங்களாக அஜய் மிஸ்ரா மற்றும் மகேந்திர நாத் பாண்டே ஆகியோருக்கு பதிலாக, அதே சமூகத்தை சேர்ந்த உத்தரப்பிரதேச முன்னாள் பாஜக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான லக்ஷ்மி காந்த் பஜ்பாய் மற்றும் பாஸ்தி எம்பி ஹரிஷ் திவேதி ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என்கிறார்கள்.
மீரட் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து பலமுறை எம்எல்ஏவாக லக்ஷ்மி காந்த் பஜ்பாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும்கூட, 2017ஆம் ஆண்டு தேர்தலில் உத்தரப்பிரதேசம் முழுவதும் பாஜக அலை வீசினாலும், பஜ்பாய் தோல்வியை சந்தித்தார். வலுவான ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட பாஜகவின் முன்னணி தலைவரான பஜ்பாய், 2022ஆம் ஆண்டு மே மாதம் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
வருண் காந்திக்கு சீட் மறுப்பு?
இதற்கிடையில், 2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதி எம்.பி.யான வருண் காந்திக்கு சீட் மறுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. விவசாயிகளின் துயரம், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உள்ளிட்ட பல பிரச்சினைகளில் சொந்தக் கட்சியான பாஜகவை கடுமையான விமர்சித்திருவர்களில் வருண் காந்தியும் ஒருவர் என்பது கவனிக்கத்தக்கது.
எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலில் பாஜக சார்பாக வருண் காந்தி போட்டியிடுவாரா அல்லது அதற்கு முன்னதாக அரசியல் மாற்றம் பற்றி யோசித்து வருகிறாரா என்பது தெரியவில்லை. வருண் காந்தியின் அரசியல் மாற்றம் தொடர்பான ஊகங்கள் வெளியே வந்தாலும், இதுவரை அவர் மவுனமே காத்து வருகிறார். வருண் காந்தியின் பிலிபிட் மக்களவைத் தொகுதி ஒருகாலத்தில் அவரது தாயாரான மேனகா காந்தி வசம் இருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலில் பிலிபிட் மக்களவைத் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தேர்தல் அரசியலில் வருண் காந்தி இறங்கினார். அவரது தாயார் மேனகா காந்தி தற்போது சுல்தான்பூர் எம்.பி.யாக உள்ளார்.
2024ஆம் ஆண்டு தேர்தலில் பிலிபிட் தொகுதியில் வருண் காந்திக்கு சீட் கொடுப்பது பற்றி பாஜக மேலிடம் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வாய்ப்புள்ளதாக டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை வருண் காந்திக்கு சீட் இல்லையென்றால், பிலிபிட் நகர சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வும், ஓபிசி சமூகத்தை சேர்ந்தவருமான சஞ்சய் சிங் கங்வார் பாஜக மேலிடத்தில் சாய்ஸாக இருக்கலாம் என்கிறார்கள். 2014ஆம் ஆண்டு முதல் பாஜகவை பெருமளவில் ஆதரித்து வரும் ஓபிசி சமூகத்தினரை இது திருப்திப்படுத்தும் என்கிறார்கள்.
அதேபோல், இப்போது 74 வயதாகும் சந்தோஷ் கங்வாருக்குப் பிறகு, தெராய் மற்றும் பரேலி பகுதிகளில் மற்றொரு ஓபிசி தலைவரை பாஜக வளர்க்க வேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பரேலி பகுதியின் மூத்த தலைவரான அவர், 1989 முதல் 2019 வரை எட்டு முறை அந்த தொகுதியில் இருந்து மக்களவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இடையில், 2009 ஆம் ஆண்டு தேர்தலில் மட்டும் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சிங் ஆரோனிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்துள்ளார்.
“பரேலி மற்றும் அதை ஒட்டிய இடங்களில் சந்தோஷ் கங்வாரின் புகழுக்கு இணையான மற்றொரு ஓபிசி தலைவரை கட்சி தேடுகிறது.” என பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அண்மைக்காலமாகவே தேசிய பிரச்சினைகளுக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவதில் வருண் காந்தி பெரிதாக ஈடுபாடு காட்டுவதில்லை. ஆனால் கட்சி அவரது செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்கிறார்கள். வருண் காந்திக்கு எதிராக கட்சி எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாலும், அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்பது நிதர்சனமான உண்மை. கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து வருண் காந்தியும், அவரது தாயார் மேனகா காந்தியும் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளனர் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.