நாடு முழுவதும் இயக்கும் வகையில் 10,000 மின்சார பேருந்துகளை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், நகர பேருந்துகளின் சேவையை அதிகரிக்கும் வகையில் 'PM-eBus Sewa' என்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 169 நகரங்களில் இயக்கும் பொருட்டு 10,000 மின்சார பேருந்துகளை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், 169 நகரங்களில் 10,000 இ-பஸ்கள் இயக்கப்படும் என்றார். இந்த திட்டம் ரூ.57,613 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் எனவும், பேருந்து கொள்முதல் மற்றும் பராமரிப்பு ஆகியவை PPP (அரசு, தனியார் பங்களிப்பு) முறையில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இந்த திட்டத்துக்கு ரூ.20,000 கோடி மத்திய அரசால் வழங்கப்படும் எனவும் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். “இந்த திட்டத்தின்படி, PPP மாதிரியின் கீழ் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். தனியார் பங்களிப்புக்கான ஏலம் நடத்தப்படும். இதில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம். இந்தத் திட்டம் 2037 வரை செயல்படுத்தப்படும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த திட்டத்தின் மூலம் நகரங்களில் 10 ஆண்டுகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும். யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு பகுதி மற்றும் மலை மாநிலங்களின் அனைத்து தலைநகரங்களும் உட்பட மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் பேருந்துகள் இயக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், ஒழுங்கமைக்கப்பட்ட பேருந்து சேவை இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.” எனவும் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மாநகரப் பேருந்து சேவைகளில் 10,000 மின்சாரப் பேருந்துகளை இணைப்பதன் மூலம், இந்தத் திட்டம் 45,000 முதல் 55,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம், பேருந்துகளுக்கான முன்னுரிமை, உள்கட்டமைப்பு, மல்டிமாடல் இன்டர்சேஞ்ச் வசதிகள், NCMC-அடிப்படையிலான தானியங்கி கட்டண வசூல் அமைப்புகள், சார்ஜிங் உள்கட்டமைப்பு போன்ற பசுமை முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில் அமையும் என தெரிகிறது.