பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது: ப.சிதம்பரம் சாடல்!

Published : Jun 28, 2023, 01:28 PM IST
பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது: ப.சிதம்பரம் சாடல்!

சுருக்கம்

பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்

பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தி பேசிய பிரதமர் மோடியின் கருத்து நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட செயல் திட்டத்தோடு செயல்படும் பெருமான்மை அரசாங்கத்தால் பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது; ஏனெனில் அது பிளவுகளை ஏற்படுத்தும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, வெறுப்புணர்வு குற்றங்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி பேசுவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில்“பொது சிவில் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி பேசியபோது, ஒரு தேசத்தையும், ஒரு குடும்பத்தையும் ஒப்பிட்டு பேசுகிறார். சுருக்கமான அர்த்தத்தில் பார்த்தால், அவரது ஒப்பீடு உண்மையாகத் தோன்றலாம். ஆனால், உண்மை வேறு மாதிரியானது. ஒரு குடும்பம் ரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்ட ஆவணமான அரசியலமைப்பின் மூலம் ஒரு தேசம் ஒன்றிணைக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் கூட பன்முகத்தன்மை உள்ளது. அதேபோல், இந்திய மக்களிடையே பன்முகத்தன்மையையே அரசியலமைப்பும் அங்கீகரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட செயல் திட்டத்தோடு செயல்படும் பெருமான்மை அரசாங்கத்தால் பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது.” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

மேலும், பொது சிவில்  சட்டத்தை சாதாரண ஒன்று என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார். ஆனால், தற்போது அது சாத்தியமில்லை என்ற சட்ட ஆணையத்தின் கடந்த அறிக்கையை அவர் படிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாஜகவின் சொல்லாலும் செயலாலும் இன்று நாடு பிளவுபட்டுள்ளது. மக்கள் மீது திணிக்கப்படும் பொது சிவில் சட்டம் பிளவுகளை மேலும் விரிவுபடுத்தும் எனவும் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

“பிரதமரின் பொது சிவில் சட்டம் தொடர்பான பேச்சு, பணவீக்கம், வேலையின்மை, வெறுப்புக் குற்றங்கள், பாகுபாடு மற்றும் மாநிலங்களின் உரிமைகளை மறுப்பது ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கம் கொண்டது. எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நல்லாட்சியில் தோல்வியடைந்த காரணத்தால், வாக்காளர்களை பிளவுபடுத்தவும், அடுத்த தேர்தலில் வெற்றி பெறவும் பொது சிவில் சட்டத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.” எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பொது சிவில் சட்டத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி: நள்ளிரவில் கூடிய முஸ்லிம் சட்ட வாரியம்!

முன்னதாக, மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஒரே குடும்பத்துக்கு இரண்டு வெவ்வேறு விதமான சட்டத்திட்டங்கள் எப்படிப் பொருந்தும். அதேபோல் ஒரு தேசம் இரண்டு விதமான சட்டங்களைக் கொண்டு இயங்க முடியாது என  பொது சிவில் சட்டத்தை வலியுறித்தி பேசினார்.

மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்கள், பரம்பரை விதிகள், தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றை மாற்றியமைத்து, நாடு முழுமைக்கும், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருந்தும் வகையிலான ஒரே மாதிரியான சட்டம்தான் பொது சிவில் சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!